பயிற்சியாளரைப் பிரிந்தார் சாய்னா நெவால்; கோபி சந்திடம் மீண்டும் பயிற்சி பெற முடிவு!

2014 செப்டம்பர் முதல் பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா நெவால், தற்போது ஹைதராபாத்தில் கோபி சந்திடம் பயிற்சி பெற...
பயிற்சியாளரைப் பிரிந்தார் சாய்னா நெவால்; கோபி சந்திடம் மீண்டும் பயிற்சி பெற முடிவு!

இது எதிர்பாராத திருப்பம். பயிற்சியாளர் விமல் குமாரிடமிருந்து பிரிந்து மீண்டும் கோபி சந்திடம் பயிற்சி பெறவுள்ளார் சாய்னா நெவால்.

இதுகுறித்து ட்விட்டரில் சாய்னா நெவால் கூறியதாவது: 

கோபிசந்த் அகாடமியில் மீண்டும் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளேன். இதுகுறித்து கோபி சந்த் சாரிடம் பேசினேன். எனக்கு உதவியளிக்க அவர் முன்வந்ததற்கு நன்றி. என் பாட்மிண்டன் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் என் குறிக்கோள்களை நிறைவேற்ற அவர் உதவுவார் என எண்ணுகிறேன். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு உதவியாக இருந்த விமல் சாருக்கு நன்றி. உலகின் நெ.1 வீராங்கனையாக அவர் எனக்கு உதவியுள்ளார். 2015, 2017-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு பதக்கங்களையும் (வெள்ளி மற்றும் வெண்கலம்) பல சூப்பர் சீரீஸ் பட்டங்களையும் வெல்ல உதவியுள்ளார். மீண்டும் ஹைதராபாத்துக்குத் திரும்பியுள்ளேன். அனைவரும் எனக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் சாய்னா 21-12, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், இந்த முறை அரையிறுதியில் தோற்றதால் வெண்கலத்தோடு வெளியேற நேர்ந்தது. இதையடுத்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேசமயம் கோபி சந்திடம் பயிற்சி பெற்ற சிந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

2014 செப்டம்பர் முதல் பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா நெவால், தற்போது ஹைதராபாத்தில் கோபி சந்திடம் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளார். சாய்னாவின் இந்த முடிவு பாட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளர் விமல் குமார் இதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com