புரோ கபடி: ஜெய்ப்பூருக்கு 5-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி: ஜெய்ப்பூருக்கு 5-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

இதன்மூலம், இந்த சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி, 5-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. வலுமிக்க அணியான குஜராத், கொல்கத்தா மண்ணில் தொடர்ந்து 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, ஜெய்ப்பூரின் முதல் ரைடர் பவன் குமாரை வீழ்த்தி முதல் புள்ளியை பெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடிய அந்த அணி 6-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
10-ஆவது நிமிடத்தில் "வாழ்வா-சாவா' ரைடு சென்ற ஜெய்ப்பூர் கேப்டன் ஜஸ்வீர் சிங் ஒரு புள்ளியை பெற, அந்த அணி சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. 18-ஆவது நிமிடத்தில் ரைடு சென்ற ஜெய்ப்பூரின் அஜித் சிங், இரு புள்ளிகளைக் கைப்பற்றினார்.
அப்போது, ஸ்கோர் சமநிலையை (8-8) எட்டியது. இதையடுத்து, ஜெய்ப்பூரின் பின்கள வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட, குஜராத் அணி 19-ஆவது நிமிடத்தில் ஆல்-அவுட் ஆனது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் ஜெய்ப்பூரின் பின்கள வீரர்கள் அபாரமாக ஆட, அந்த அணி 19-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
26-ஆவது நிமிடத்தில் குஜராத் அணியில் 2 வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். எனினும் அசத்தலாக செயல்பட்ட அவர்கள், ஜெய்ப்பூர் ரைடர் பவன் குமாரை வீழ்த்தி சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர். எனினும், தொடர்ந்து தடுமாறிய குஜராத் 33-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட் ஆனது.
இதனால் ஜெய்ப்பூர் அணி 27-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு குஜராத் கடுமையாக போராடியபோதும், புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர, தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இறுதியில் 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
குஜராத் அணியில் சச்சின், கேப்டன் சுகேஷ் போன்ற முன்னணி ரைடர்கள் இருந்தபோதிலும் ஜெய்ப்பூரின் பின்களம் மிக வலுவாக இருந்ததால் குஜராத் அணியால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. ஜெய்ப்பூர் அணியின் பலமாக திகழ்ந்த கேப்டன் ஜஸ்வீர் 20 ரைடுகளில் 6 புள்ளிகளை பெற்றுத் தந்தார்.
அந்த அணியின் பின்கள வீரர் சோம்வீர் சிறப்பாக செயல்பட்டு 4 புள்ளிகளை கைப்பற்றினார். குஜராத் அணியைப் பொருத்த வரையில் சச்சின் தனது ரைடின் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.
பெங்கால் வெற்றி: இதனிடையே, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 29-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

துளிகள்...

*கிரீஸ் நாட்டில் நடைபெற்ற ஹெலாஸ் ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோஹன் கபூர்-குஹூ கர்க் ஜோடி 21-19, 21-19 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான உத்கர்ஷ் அரோரா-கரிஷ்மா வத்கர் இணையை வென்று சாம்பியன் ஆனது.
*இத்தாலியில் நடைபெற்று வரும் "உலக வில்வித்தை இறுதிச்சுற்று' போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com