டி20 போட்டி: இந்தியாவின் ஆதிக்கத்தைத் தகர்க்குமா இலங்கை அணி?

கடைசியாக விளையாடிய நான்கு டி20 போட்டிகளிலும் கோலி தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார்...
டி20 போட்டி: இந்தியாவின் ஆதிக்கத்தைத் தகர்க்குமா இலங்கை அணி?

டி20 போட்டிகளில் இலங்கை அணி சமீபகாலமாக நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களை இலங்கை வென்றுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் 1-1 என சமன் செய்தது. இதன் அடிப்படையில் சமீபத்தில் விளையாடிய 8 போட்டிகளில் 5-ல் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

உபுல் தரங்கா தலைமையில் கொழும்பில் நடைபெறும் நாளைய டி20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி கோலி தலைமையிலான இந்திய அணியைத் தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள் தொடரை 5-0 எனவும் வென்று இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி நாளை நடைபெறும் ஒரே ஒரு டி20 போட்டியையும் வெல்ல முனைப்புடன் உள்ளது. இந்தப் போட்டியை வென்றால் இலங்கை அணிக்கு மிகக்பெரிய தர்மசங்கடம் ஏற்படும். அதைத் தவிர்க்கவாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை அணி.

இந்திய டி20 அணியில் கோலி, ராகுல், ரோஹித் சர்மா, பூம்ரா, சாஹால், தோனி, ஜாதவ், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரஹானே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

கடந்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. அதன்பிறகு இந்திய அணி 4 டி20 தொடர்களில் பங்கேற்று இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆடிய இரு தொடர்களிலும் தோல்வியடைந்தது. இந்திய அணி கடைசியாக ஆடிய 9 டி20 ஆட்டங்களில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணி கடைசியாக விளையாடிய நான்கு டி20 போட்டிகளிலும் கோலி தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார். மே.இ. அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றார்கள். ஆனால் இந்தமுறை இருவருமே அணியில் இல்லை. எனவே இந்தமுறையும் கோலி தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் ராகுலும் ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். ஒன்றிரண்டு மாற்றங்களைத் தவிர கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே அணி டி20 போட்டியிலும் களமிறங்க வாய்ப்புண்டு. 

இலங்கை அணி: உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தில்ஷன் முணவீரா, தசுன் ஷனகா, சிறிவர்தனா, வனிந்து ஹசரங்கா, அகிலா தனஞ்ஜெயா, ஜெஃப்ரே வாண்டர்சே, உதானா, பிரசன்னா, திசாரா பெரேரா, மலிங்கா, சுரங்கா லக்மல், விகும் சஞ்சயா. 

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com