ஐசிசி தரவரிசை: சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஐசிசி, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளிகள் 873-இல் இருந்து, 887-ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, ஒருநாள் தரவரிசையில் அதிக புள்ளிகள் (887) பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சச்சின் பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் விளாசியதன் மூலம் கோலி இந்த ஏற்றத்தை அடைந்துள்ளார். இந்நிலையில், ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரும் பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளனர்.
அத்தொடரில் இரு சதங்கள் உள்பட மொத்தமாக 302 ரன்கள் குவித்த ரோஹித் 5 இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதே தொடரில் மொத்தம் 162 ரன்கள் அடித்த தோனி 2 இடங்கள் ஏற்றம் கண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
4-ஆவது இடத்தில் பூம்ரா: பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 27 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் இந்த ஏற்றத்தை அடைந்துள்ளார். இருதரப்பு தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் பூம்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 20-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹார்திக் பாண்டியா 2 இடங்கள் முன்னேறி 61-ஆவது இடத்துக்கும், குல்தீப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-ஆவது இடத்துக்கும், யுவேந்திர சாஹல் 55 இடங்கள் முன்னேறி 99-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில் 3-ஆவது இடத்தில் நீடிக்கும் இந்தியா, தற்போது 3 புள்ளிகளை அதிகமாகப் பெற்று 5,266 புள்ளிகளுடன் உள்ளது.

சதத்தில் சாதனை: சச்சினை எட்டுவதற்கு அதீத முயற்சி தேவை

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசியுள்ள சச்சினின் உலக சாதனையை சமன் செய்ய, அதீத முயற்சி தேவை என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் கோலி, ஒருநாள் போட்டியில் தனது 30-ஆவது சதத்தை விளாசினார். அதன்மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில், சச்சின் சாதனையை சமன் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, "சச்சின் மிகச் சிறந்த வீரர். சதமடிப்பதில் அவர் புரிந்துள்ள சாதனையை எட்ட அதீத முயற்சி தேவை. இருப்பினும், ரிக்கி பாண்டிங் போன்ற வீரரின் சாதனையை சமன் செய்தது எனக்கான கெளரவம். சாதனைகளை எப்போதுமே கருத்தில் கொள்வதில்லை. அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டியதிலேயே கவனம் கொள்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com