பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

ஐந்தாவது சீசன் புரோ கபடி போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

ஐந்தாவது சீசன் புரோ கபடி போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ், ஓர் ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. 2 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது. எஞ்சிய 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ், கடைசி கட்டத்தில் வெற்றியை நழுவ விட்டது.
அந்த ஆட்டத்துக்குப் பின்னர், அதன் பயிற்சியாளர் பாஸ்கரன் 'தினமணி'க்கு அளித்த சிறப்புப் பேட்டி...
உங்கள் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதற்கான காரணம்? என்னதான் பிரச்னை?
இந்த சீசனில் எல்லா அணிகளுமே நிறைய ஆட்டங்களில் நூலிழை அளவில் வெற்றிகளை நழுவ விட்டுள்ளன. இதற்கு தமிழ் தலைவாஸ் அணியும் விலக்கல்ல. இந்த சீசனில் நாங்கள் புதிய அணியாக களமிறங்கியிருக்கிறோம். எங்கள் அணியில் புதுமுக வீரர்களும் இருக்கிறார்கள். இதனால் ஆரம்பத்தில் எங்கள் வீரர்களிடையே பதற்றம் இருந்தாலும் இப்போது நல்ல முன்னேற்றம் உள்ளது.
வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறோம். இந்த சீசனில் நாங்கள் 6 ஆட்டங்களில் தோற்றிருக்கிறோம். ஆனால் அவற்றில் 5 ஆட்டங்களில் நூலிழையிலேயே வெற்றியை தவற விட்டோம்.
உங்கள் அணியின் பின்களம் வலுவாக இருக்கிறது. ஆனால், ரைடர்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் தேவைப்படுவதுபோல் தெரிகிறதே?
இந்த சீசன் தொடக்கத்தில் எங்கள் அணிக்கு ரைடு, பின்களம் என எல்லாவற்றிலுமே பிரச்னை இருந்தது. அவற்றை எல்லாம் கண்டறிந்து எங்களின் பயிற்சி முறையை அதற்கேற்றவாறு மாற்றியுள்ளோம். அதன் மூலம் எங்களுடைய பின்களத்தில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரைடிங்கை மேம்படுத்துவதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் உங்கள் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதா?
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளோம். இன்னும் 13 ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. அதில் 11 ஆட்டங்களில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். கடந்த சில ஆட்டங்களைப் பார்த்தால், நாங்கள் முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளோம். அவற்றில் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் தான் தோற்றோம்.
எங்கள் வீரர்களின் ஆட்டத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் வரக்கூடிய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியும். அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com