2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி; லயன் 13 விக்கெட்டுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லயனின் அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி; லயன் 13 விக்கெட்டுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லயனின் அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

சிட்டகாங்கில் திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முஷ்ஃபிகர் ரஹிம் 68 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 118 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. ஓ' கீஃப் 8 ரன்களுடனும், நாதன் லயன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ரன் எதுவும் சேர்க்காமல் 377 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 72 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆடத் தொடங்கிய வங்கதேச அணி லயனின் சுழற்பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக முஷ்ஃபிகர் ரஹிம் 31 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் லயனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். 43 ரன்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் பிறகு வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார்கள். வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லயன் அற்புதமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ், ஓ' கீஃப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்ய 86 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியை வென்றது. மேலும் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

இந்த டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் லயன். ஆசியாவில் ஒரு டெஸ்டில் 13 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். லயனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com