ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டெல் போட்ரோ!

இந்த வருடம் பங்கேற்ற ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் என இரு கிராண்ஸ்லாம் பட்டங்களையும்...
ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டெல் போட்ரோ!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரை டெல் போட்ரோ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். 2009-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் ஃபெடரரை வீழ்த்தி டெல் போட்ரோ பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில், இருவரும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் மோதினார்கள். இந்தப் போட்டிக்கு முன்பு டெல் போட்ரோவுடன் 21 முறை மோதியுள்ள ஃபெடரர் அதில் 16 வெற்றிகளைப் பெற்றுள்ளார். எனவே இதிலும் ஃபெடரரின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் காலிறுதிச் சுற்றுகளில் ஃபெடரர், நடால் ஆகிய இருவரும் வெற்றி பெறுகிற பட்சத்தில் அரையிறுதியில் ஃபெடரர் - நடால் மோதல் நிகழும் என்பதால் ஃபெடரரின் வெற்றியையே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் டெல் போட்ரோ அபாரமாக விளையாடி,  7-5, 3-6, 7-6 (8), 6-4  என்ற செட் கணக்கில் ஃபெடரரைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வருடம் பங்கேற்ற ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் என இரு கிராண்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற ஃபெடரர், 18 கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்துள்ளார். அரையிறுதியில் நடாலை எதிர்கொள்கிறார் டெல் போட்ரோ.

2009 அமெரிக்க ஓபனுக்குப் பிறகு மணிக்கட்டு காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல் போட்ரோ, 4 முறை அறுவை சிகிச்சைக்கு ஆளானார். இதனால் மொத்தமாக 10 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைத் தவறவிட்டார். உலகின் 4-ஆம் நிலை வீரராக இருந்த அவர், 1,045-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் ஒய்வுபெறவும் அவர் யோசித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com