அமெரிக்க ஓபன்: ஃபெடரருக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்தார் டெல் போட்ரோ

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி
அமெரிக்க ஓபன்: ஃபெடரருக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்தார் டெல் போட்ரோ

அரையிறுதியில் நடாலை சந்திக்கிறார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை சந்திக்கிறார்.
முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனில் ஃபெடரரை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார் டெல் போட்ரோ. அதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் மீண்டும் ஃபெடரரை சந்தித்த டெல் போட்ரோ, காலிறுதியிலேயே அவரை வெளியேற்றியுள்ளார்.
அதேபோல், அந்த சீசனின் அரையிறுதியில் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டெல் போட்ரோ, இந்த சீசனிலும் அரையிறுதியில் நடாலை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஃபெடரர், போட்டித் தரவரிசையில் 24-ஆவது இடத்தில் இருக்கும் டெல் போட்ரோவை சந்தித்தார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக 2 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 7-5, 3-6, 7-6(8), 6-4 என்ற செட் கணக்கில் டெல் போட்ரோ வெற்றி பெற்றார்.
இத்துடன், ஃபெடரரை 22 முறை சந்தித்துள்ள டெல் போட்ரோ தனது 6-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஃபெடரர் 2017-ஆம் ஆண்டு கிராண்ட்ஸ்லாம் சீசனில் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனில் அவர் பட்டம் வென்றிருந்தார்.
தோல்விக்குப் பிறகு ஃபெடரர் கூறியதாவது:
டெல் போட்ரோ, ஒரு சிங்கம் போல விளையாடினார். தோல்வி அடையும் அளவுக்கு நான் மோசமாக விளையாடவில்லை. எனினும், எனது விளையாட்டு, பட்டம் வெல்லும் அளவுக்கு இல்லை எனத் தெரிகிறது. என்ன நடந்தது என்று மட்டுமே இப்போது யோசிக்கிறேன். தோல்வி எவ்வாறு நிகழ்ந்தது எனத் தெரியவில்லை என்று ஃபெடரர் கூறினார்.
வெற்றிக்குப் பிறகு டெல் போட்ரோ கூறியதாவது:
இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது. நன்றாக சர்வ் செய்தேன். இயன்ற வரையில் பலம்கொண்டு ஃபோர்ஹேண்ட் ஷாட்களை பிரயோகித்தேன். ஆட்டத்தில் ஒருமுறை டபுள் ஃபால்ட் செய்தேன். ஃபெடரர் போன்ற ஒரு வீரருக்கு எதிரான ஆட்டத்தில் அது நிகழக் கூடாது. இருப்பினும், எனக்கு அதிருஷ்டம் இருந்தது.
மணிக்கட்டுப் பகுதி காயத்திலிருந்து மீண்டு, அரையிறுதி வரை முன்னேறுவேன் என்று நம்பவில்லை. நடால் தற்போது உலகின் முதல் நிலை வீரராக இருக்கிறார். இருப்பினும், 2009-ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை மீண்டும் அடைவேன் என நம்புகிறேன் என்று டெல் போட்ரோ கூறினார்.
நடால் வெற்றி: முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நடால் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆன்ட்ரு ருபலேவை ஒரு மணி 37 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபனில் நடாலுக்கு இது 6-ஆவது அரையிறுதியாகும். அதேவேளையில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவருக்கு 26-ஆவது அரையிறுதி. ஆனால், அவர் எதிர்கொள்ள இருக்கும் டெல் போட்ரோவுக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது 4-ஆவது அரையிறுதியே. கடைசியாக அவர், 2013-ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
டெல் போட்ரோவை இதுவரை 13 முறை சந்தித்துள்ள நடால், அதில் 8 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அரையிறுதி குறித்து நடால் கூறுகையில், 'டெல் போட்ரோ மிகச் சிறந்த வீரர். அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில், அவரை வீழ்த்துவது கடினம். அவரது ஃபோர்ஹேண்ட் ஷாட் தான் இந்த போட்டியிலேயே வேகமானது எனக் கருதுகிறேன்' என்றார்.
பிளிஸ்கோவா அதிர்ச்சித் தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
போட்டித் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ வான்டெவெக், 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார்.
இதேபோல், மற்றொரு காலிறுதியில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எஸ்டோனியாவின் கையா கானேபியை வீழ்த்தினார்.
அமெரிக்கர்கள் மோதும் அரையிறுதி: இதையடுத்து, 2 அரையிறுதி ஆட்டங்களிலும் மோதும் 4 வீராங்கனைகளுமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றில் வீனஸ் வில்லியம்ஸ்-ஸ்லோன் ஸ்டீபன்ஸும், மற்றொன்றில் கோகோ வான்டெவெக்-மேடிசன் கீஸும் மோதுகின்றனர். கடந்த 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறு நடப்பது இது முதல் முறையாகும்.
36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தப் போட்டியில், டிராசி ஆஸ்டின், கிறிஸ் எவர்ட், மார்ட்டினா நவ்ரத்திலோவா, பார்பரா போட்டர் ஆகிய 4 வீராங்கனைகள் அரையிறுதியில் மோதியது நினைவுகூரத்தக்கது. அதில் டிராசி ஆஸ்டின் பட்டம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com