16-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
16-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் நடால்

எனது வாழ்வின் "பெஸ்ட்' சீசன்: நடால் நெகிழ்ச்சி

2017 சீசன் எனது வாழ்வின் சிறந்த சீசன் என்று ரஃபேல் நடால் தெரிவித்தார்.
அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அவர் கூறியதாவது: போட்டி முடிவுகளோடு ஒப்பிடுகையில் 2017 சீசன் எனக்கு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் விளையாடியிருக்கிறேன். அதில் இரு முறை பட்டம் வென்றிருக்கிறேன். இது மிகப்பெரிய விஷயமாகும். மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.
இந்த ஆண்டு எனக்கு சவால்மிக்க ஆண்டாக இருந்தாலும், களிமண் தரையில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் வென்றிருக்கிறேன். இந்த சீசன் எனக்கு உணர்ச்சிபூர்வமான ஒன்றாகும். ஏனெனில் காயம் காரணமாக ஏற்பட்ட கடினமான தருணங்களை கடந்து வந்திருக்கிறேன் என்றார்.
கடந்த 2003 முதல் தற்போது வரையிலான காலங்களில் 58 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 53 பட்டங்களை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (19), நடால் (16), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (12), பிரிட்டனின் ஆன்டி முர்ரே (3), ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (3) ஆகியோர் வென்றுள்ளனர்.
எஞ்சிய 5 பட்டங்களை அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஆர்ஜென்டீனாவின் கேஸ்டான் காடியோ, ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ரஷியாவின் மராட் சாஃபின், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் வென்றுள்ளனர். எனவே நடால் விளையாடிய காலக்கட்டம் மிகக் கடினமானதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து நடால் கூறுகையில், "எங்களுடைய காலம் வலுவான வீரர்களைக் கொண்டதாகும். எங்களில் சிலர் டென்னிஸில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்தவர்கள். ஏராளமான பட்டங்களை வெல்வது மிகக் கடினமானதாகும். ரோஜர் ஃபெடரர், நான், ஜோகோவிச் ஆகியோர் எதிர்பார்த்ததைவிட அதிக கிராண்ட்ஸ்ஸாம் பட்டங்களை வென்றுவிட்டோம்' என்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அமெரிக்க ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்றுள்ள நடால், ஒட்டுமொத்தமாக 16-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை அதிகாலையில் (இந்திய நேரப்படி) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து சாம்பியன் ஆனார்.
அமெரிக்க ஓபனில் மூன்றாவது முறையாக பட்டம் வென்றிருக்கிறார் நடால். இதற்கு முன்னர் 2010, 2013 ஆகிய ஆண்டுகளில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இங்கு பட்டம் வென்றுள்ளார் நடால்.
கடந்த ஜூனில் பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்த நடால், இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார். இந்த ஆண்டில் 5 பட்டங்களை வென்றிருக்கும் நடாலுக்கு, ஒட்டுமொத்தமாக இது 74-ஆவது பட்டமாகும்.
15 வயதில் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் காலடி எடுத்து வைத்த நடால், 17-ஆவது வயதில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். 19-ஆவது வயதில் பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக களம்புகுந்த நடால், அதில் சாம்பியன் ஆனார். பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற முதல் 10 ஆண்டுகளில் 9 பட்டங்களை வென்று அசத்தினார். 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டனிலும், 2009-இல் ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்ற நடால், 2010 அமெரிக்க ஓபனில் வாகை சூடியபோது, "ஓபன் எரா'வில் கேரியர் கிராண்ட்ஸ்லாம் (அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வென்றவர்) பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதுதவிர கேரியர் கோல்டன் கிராண்ட்ஸ்லாம் (ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றவர்கள்) பட்டம் வென்ற இருவரில் நடாலும் ஒருவர். மற்றொருவர் ஆந்த்ரே அகஸ்ஸி ஆவார். 2013-இல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு தொடர் காயம், ஃபார்மை இழந்தது போன்ற காரணங்களால் பெரும் சரிவைச் சந்தித்தார் நடால்.
இதனால் நடாலின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், 2017-இல் மீண்டும் வலுவான வீரராக களம்புகுந்த நடால், இந்த ஆண்டு இரு கிராண்ட்ஸ்ஸாலம் பட்டங்களைக் கைப்பற்றி தனது ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
அதேநேரத்தில் 34 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று முதல்முறையாக இறுதிச் சுற்றில் விளையாடிய கெவின் ஆண்டர்சன் ஏமாற்றத்தோடு வெளியேறினார். கடந்த 52 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்கர் கெவின் ஆண்டர்சன் ஆவார்.


மார்ட்டினா ஹிங்கிஸூக்கு 25-ஆவது கிராண்ட்ஸ்லாம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-சீன தைபேவின் சான் யங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி ரடேக்கா-கேத்தரினா சினிக்கோவா ஜோடியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் மார்ட்டினா ஹிங்கிஸ். அவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 5, மகளிர் இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 7 பட்டங்களை வென்றுள்ளார்.
இது குறித்து மார்ட்டினா ஹிங்கிஸ் கூறுகையில், "25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இதனால் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றேன். அதே அமெரிக்க ஓபனில் இப்போது மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகியிருக்கிறேன். இது மிக அற்புதமான பயணமாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com