சென்னை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாகப் பந்துவீசி 8 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை...
சென்னை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 347 ரன்கள் குவித்துள்ளது. 

ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. 

இந்த ஆட்டத்தைக் காண சி, டி, இ கேலரிகளின் கீழ் பகுதிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எவ்விதக் கட்டணமும் கிடையாது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. டேவிட் வார்னர் 64, ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். டிராவிஸ் ஹெட்டும் அரை சதம் எடுத்தார். அவர் 65 ரன்களில் வீழ்ந்தார். ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இன்றைய பந்துவீச்சாளர்களில் அவர்தான் சிறப்பாகப் பந்துவீசி ரன் குவிப்பை ஓரளவு கட்டுப்படுத்தினார். 

40 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கடைசி பத்து ஓவர்களில் 101 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 60 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் வேட் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார்கள்.

பிசிசிஐ தலைவர் லெவன் அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாகப் பந்துவீசி 8 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய பந்துவீச்சாளர்களில் இவர் மட்டுமே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com