ஆம்லா, பெரேரா அதிரடி; பாகிஸ்தானுக்கு உலக லெவன் அணி பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது உலக லெவன் அணி.
ஆம்லா, பெரேரா அதிரடி; பாகிஸ்தானுக்கு உலக லெவன் அணி பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது உலக லெவன் அணி. இதன்மூலம் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது உலக லெவன் அணி.
அந்த அணியின் தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா 55 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 72, திசாரா பெரேரா 19 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
பாகிஸ்தானின் லாகூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் 
ஃபகர் ஜமான்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவர்களில் 41 ரன்கள் சேர்த்தது. ஃபகர் ஜமான் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அஹமது ஷெஸாத்துடன் இணைந்தார் பாபர் ஆஸம். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 7.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது பாகிஸ்தான். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி, பாகிஸ்தான் 12.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. 
அஹமது ஷெஸாத் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்த நிலையில் தாஹிர் பந்துவீச்சில் மில்லரிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. பாபர் ஆஸம் 38 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 
இதன்பிறகு இமாத் வாசிம் 15 ரன்களிலும், கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது ரன் ஏதுமின்றியும் வெளியேற, கடைசிக் கட்டத்தில் ஷோயிப் மாலிக் 23 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. உலக லெவன் தரப்பில் சாமுவேல் பத்ரீ, திசாரா பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ஆம்லா அதிரடி: பின்னர் ஆடிய உலக லெவன் அணியில் தமிம் இக்பால்-ஹஷிம் ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. தமிம் இக்பால் 19 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த டிம் பெய்ன் 10 ரன்களில் நடையைக் கட்டினார். 
இதையடுத்து கேப்டன் டூபிளெஸ்ஸில் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஆம்லா 37 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனிடையே டூபிளெஸ்ஸிஸ் 20 ரன்களில் வெளியேற, திசாரா பெரேரா களம்புகுந்தார். அப்போது உலக லெவன் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 69 ரன்கள் தேவைப்பட்டன. 
ஆம்லாவும், பெரேராவும் அதிரடியாக ஆட, கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. சோஹைல் கான் வீசிய 19-ஆவது ஓவரில் பெரேரா இரு சிக்ஸர்களை விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தன. இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 
ரயீஸ் வீசிய அந்த ஓவரின் 5-ஆவது பந்தில் பெரேரா சிக்ஸரை விளாச, 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது உலக லெவன் அணி. ஆம்லா 55 பந்துகளில் 72, பெரேரா 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெரேரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை லாகூரில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com