புரோ கபடி: தமிழ் தலைவாஸுக்கு 2-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 75-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது. 
தமிழ் தலைவாஸ் ரைடரை சுற்றி வளைக்கும் யு.பி.யோதா அணியினர்.
தமிழ் தலைவாஸ் ரைடரை சுற்றி வளைக்கும் யு.பி.யோதா அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 75-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 12-18 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தமிழ் தலைவாஸ் அணி, கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடி யு.பி.யோதா அணியை வீழ்த்தியது. 
இந்த சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 
ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் யு.பி.யோதா ரைடர் நிதின் தோமர் தனது முதல் ரைடிலேயே இரு புள்ளிகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட நிதின் தோமர், மேலும் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் 3 நிமிடங்களின் முடிவில் 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது யு.பி.யோதா. 
தொடர்ந்து தடுமாறிய தமிழ் தலைவாஸ் அணி 4-ஆவது நிமிடத்தில் ஆல் அவுட்டாக, யு.பி.யோதா 9-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர், பிரபஞ்சன் ஆகியோர் தலா ஒரு புள்ளியைப் பெற்றுத் தர, அந்த அணி மெதுவாக சரிவிலிருந்து மீண்டது. அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய யு.பி.யோதா அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 18-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் நிமிடத்திலேயே (ஒட்டுமொத்தமாக 21-ஆவது நிமிடம்) யு.பி.யோதாவை ஆல்அவுட்டாக்கியது. இதன் காரணமாக ஓரளவு சரிவிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி 16-20 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
33-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணி 26-21 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு இரு புள்ளிகளைப் பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, 37-ஆவது நிமிடத்தில் 25-26 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. 
தொடர்ந்து அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி, 38-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதாவை ஆல் அவுட்டாக்கியது. இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 29-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதே 38-ஆவது நிமிடத்தில் நிதின் தோமர் சூப்பர் ரைடின் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, யு.பி.யோதா அணி 31-29 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் சூப்பர் ரைடின் மூலம் மூன்று புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 33-31 என்ற முன்னிலையை எட்டியது. இதன்பிறகு யு.பி.யோதா இரு புள்ளிகளைப் பெற, கடைசி விநாடியில் அஜய் தாக்குர் ஒரு புள்ளியைக் கைப்பற்றினார். இதனால் தமிழ் தலைவாஸ் அணி 34-33 என்ற கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.
இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு.பி.யோதா அணி 6-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. எனினும் அந்த அணி 37 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் தரப்பில் கேப்டன் அஜய் தாக்குர் 8 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். யு.பி.யோதா தரப்பில் நிதின் தோமர் 14 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இன்றைய ஆட்டம்
ஹரியாணா ஸ்டீலர்ஸ்-
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
இடம்: சோன்பட், 
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com