தொடரை வென்றது பாகிஸ்தான்

உலக லெவன் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

உலக லெவன் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் லாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உலக லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தது. ஜமான் 25 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதையடுத்து பாபர் ஆஸம் களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய அஹமது ஷெஸாத் 37 பந்துகளில் அரை சதம் கண்டார்.
பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்திருந்தபோது, அஹமது ஷெஸாத் 55 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு பாபர் ஆஸம் 31 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர், திசாரா பெரேரா ஆகியோர் தலா 32 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஹமது ஷெஸாத் ஆட்டநாயகனாகவும், பாபர் ஆஸம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதால் அங்கு சென்று விளையாட மற்ற அணிகள் மறுத்துவிட்ட நிலையில், அங்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முயற்சியாகவே மேற்கண்ட தொடர் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com