பிசிசிஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவின்மையால் பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை

பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால் எனக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனது.
பிசிசிஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவின்மையால் பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை

பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால் எனக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனது. இனிமேல் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். பயிற்சியாளரை நியமிக்கும் பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டியில் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, ரவி சாஸ்திரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கோலியின் ஆதரவு இருந்ததால் கடந்த ஜூலையில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அது தொடர்பாக மனம் திறந்துள்ள சேவாக் மேலும் கூறியதாவது: பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு எனக்கு இல்லாததால், பயிற்சியாளர் பதவியைப் பெற முடியவில்லை. இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது குறித்து நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிசிசிஐ சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவிக்கப்பட்டது. பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி, பொது மேலாளர் (கிரிக்கெட் மேம்பாடு) ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியாளர் பதவி குறித்து சிந்திக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியிடமும் ஆலோசித்தேன். அவரும் விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகே நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். பயிற்சியாளர் பதவி மீது எனக்கு ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. அவர்களாகவே கேட்டுக்கொண்டதன் காரணமாக அவர்களுக்கு உதவலாம் என நினைத்து விண்ணப்பம் செய்தேன். மற்றபடி எனக்குள்அதுபோன்ற ஓர் எண்ணம் இருந்ததில்லை. எதிர்காலத்திலும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். அப்போது ரவி சாஸ்திரியிடம் பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், "நான் ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்துவிட்டேன். ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் செய்யமாட்டேன்' என கூறினார். ரவி சாஸ்திரி ஆரம்பத்திலேயே விண்ணப்பித்திருந்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நான் சிந்தித்திருக்கமாட்டேன் என்றார் சேவாக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com