தொடர்ச்சியான வெற்றிகள்: தோனியின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளிய கோலி! 

இலங்கையில் 3 டெஸ்டுகளையும் 5 ஒருநாள் போட்டிகளையும் 1 டி 20 போட்டியையும் வென்ற கோலி...
தொடர்ச்சியான வெற்றிகள்: தோனியின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளிய கோலி! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது இந்தியா. ஹார்திக் பாண்டியா 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தோனி, 75 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒருநாள் போட்டிகளில் அவருடைய 66-ஆவது அரை சதமாகும். தோனி 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட் செய்த பிறகு மழை பெய்ததால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா. 18 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் ஃபாக்னர் 32 ரன்கள் எடுத்தார். 

இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்த அட்டகாசமான வெற்றியின் மூலம் இந்திய அணியினரும் கேப்டன் விராட் கோலியும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி: இந்திய கேப்டன்கள்

10 விராட் கோலி

(இலங்கையில் 3 டெஸ்டுகளையும் 5 ஒருநாள் போட்டிகளையும் 1 டி 20 போட்டியையும் வென்ற கோலி தொடர்ச்சியாக 9 போட்டிகளை அப்போது வென்றிருந்தார். நேற்றைய போட்டியின் மூலம் அவர் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.)

9 தோனி

குறைந்த போட்டிகளில் 50 சர்வதேசப் போட்டிகளில் வெற்றி கண்ட கேப்டன்கள்

ரிக்கி பாண்டிங் - 63 போட்டிகள்
விராட் கோலி - 70 போட்டிகள்
ஹான்ஸி குரோனியே - 72 போட்டிகள்

67

இந்த ஆட்டத்தில் 79 ரன்கள் குவித்த தோனி தனது முதல் பவுண்டரியை அடிக்க 67 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு சந்தித்த 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசினார் தோனி. 

118

தோனி-பாண்டியா ஜோடி 19.2 ஓவர்களில் 118 ரன்கள் குவித்தது. இந்தியா 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த பாண்டியாவும், தோனியும், இந்தியா 206 ரன்களை எட்டியபோதுதான் பிரிந்தனர்.

228.57

இந்த ஆட்டத்தில் பாண்டியா சந்தித்த கடைசி 21 பந்துகளில் அவருடைய சராசரி 228.57. ஆடம் ஸம்பா வீசிய 37-வது ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் பாண்டியா. 

4

இந்த ஆண்டில் சர்வதேசப் போட்டியில் 4-வது முறையாக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியுள்ளார் பாண்டியா. இதற்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரு முறை ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்டியா, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

100

இந்த ஆட்டத்தில் அரை சதமடித்ததன் மூலம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 அரை சதங்களை (ஒரு நாள் போட்டியில் 66, டெஸ்டில் 33, டி20 போட்டியில் 1) விளாசிய 4-வது இந்தியர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. சச்சின் 164 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

161.53

பாண்டியா ஆட்டமிழந்த பிறகு சந்தித்த 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார் தோனி. அப்போது அவருடைய ஸ்டிரைக் ரேட் 161.53.

53

கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் குவித்தது இந்தியா. இந்த ஆட்டத்தின் முதல் 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்த 14 ஓவர்களில்133 ரன்கள் குவித்தது.

50

டேவிட் வார்னர் , குல்தீப் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். இதன்மூலம் 50 ஆஸ்திரேலியர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.

ஒருநாள் போட்டி: சென்னையில் தோனி

33 v ஆப்பிரிக்கா XI 
139* v ஆப்பிரிக்கா XI
22 v மேற்கிந்தியத் தீவுகள் அணி
113* v பாகிஸ்தான்
15 v தென் ஆப்பிரிக்கா
79 v ஆஸ்திரேலியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com