சேப்பாக்கம் மைதானத்தில் கருப்புச் சட்டைக்குத் தடை விதித்த காவல்துறை: ரசிகர்கள் அதிருப்தி!

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையான ஒருநாள் போட்டியைக் காண வந்த ரசிகர்கள், கருப்புச் சட்டையை அணிந்துகொண்டு மைதானத்துக்குள் செல்ல..
சேப்பாக்கம் மைதானத்தில் கருப்புச் சட்டைக்குத் தடை விதித்த காவல்துறை: ரசிகர்கள் அதிருப்தி!

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையான ஒருநாள் போட்டியைக் காண வந்த ரசிகர்கள், கருப்புச் சட்டையை அணிந்துகொண்டு மைதானத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது இந்தியா. ஹார்திக் பாண்டியா 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது. பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தோனி, 75 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒருநாள் போட்டிகளில் அவருடைய 66-ஆவது அரை சதமாகும். தோனி 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட் செய்த பிறகு மழை பெய்ததால் ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதனால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா. 18 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் ஃபாக்னர் 32 ரன்கள் எடுத்தார். 

இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

கருப்புச் சட்டைக்கு தடை

இந்நிலையில் நீட் தேர்வு, அனிதா மரணம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்துக்குச் செல்பவர்கள் அனிதா மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கொண்டு செல்லுமாறும், சிக்ஸர், பவுண்டரி அடிக்கப்படும்போது அந்தப் பதாகைகளைக் காண்பிக்குமாறும் சில போராட்டக்காரர்கள் ஃபேஸ்புக் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் எதிரொலியாக ரசிகர்கள் கடும் சோதனைக்குப் பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்த ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் அருகில் இருந்த கடைகளுக்குச் சென்று வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு ஆட்டத்ததைக் காண வந்தனர்.

மைதானத்துக்குக் கொண்டு வரக்கூடாது என்று முதலில் சொல்லப்பட்ட பொருள்களில் கருப்புச் சட்டை இடம்பெறவில்லை. இதனால் பலர் கருப்புச் சட்டை அணிந்து வந்தார்கள். கருப்புச் சட்டையைக் காரணமாகச் சொல்லி திடீரென காவல்துறை அனுமதி அளிக்காததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். இந்த விதிமுறையை முன்பே சொல்லியிருந்தால் அதற்கேற்றவாறு வேறு வண்ண உடைகளை அணிந்து வந்திருப்போம். இதனால் எங்களுக்குத் தேவையில்லாத செலவுதான் ஏற்பட்டது என்று ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com