மீண்டும் சென்னைக்குத் திரும்பிய ‘தல’ தோனி! கொண்டாடிய ரசிகர்கள்! (வீடியோ)

தோனி களம்புகுந்தபோது ‘தோனி, தோனி, தோனி’ என ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப...
மீண்டும் சென்னைக்குத் திரும்பிய ‘தல’ தோனி! கொண்டாடிய ரசிகர்கள்! (வீடியோ)

கடைசியாக 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடினார் தோனி. அதன்பிறகு தோனியை நேரில் காணும் வாய்ப்பு சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்றுதான் கிடைத்தது.

2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில் விளையாடினார் தோனி. அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆனார். இதனால் தோனிக்கு சென்னை என்பது இரண்டாவது தாய் வீடு. இதைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் தோனி. சென்னை ரசிகர்களுக்காக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தோனி - சென்னை ரசிகர்கள் இடையேயான பந்தம் ஊரறிந்தது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை ரசிகர்களைச் சந்தித்தார் தோனி. கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டியும் சென்னையில் நடைபெறாததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்தார்.

வழக்கமாக இந்தியாவின் விக்கெட் விழுகிறபோது, மைதானத்தில் நிசப்தம் நிலவும். ஆனால் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சென்னை ரசிகர்களின் நாயகனான தோனி, அடுத்ததாக பேட் செய்ய களமிறங்கியதே அந்த உற்சாகத்துக்கு காரணம். தோனி களம்புகுந்தபோது "தோனி, தோனி, தோனி' என ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்ப, மைதானம் அதிர்ந்தது. அந்த நிமிடம், சென்னை ரசிகர்களிடையே தோனிக்கு இருக்கும் "மாஸ்' இன்னும் குறையவில்லை என்பதை உணரவைத்தது. ‘தல’ தோனி என்று சென்னை ரசிகர்கள் அழைப்பது ஏன் என்கிற விவாதங்கள் இணையத்தளங்களில் நடைபெற்றன. 

மிடில் ஓவர்களில் தோனிக்குப் பந்துவீசினார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா. அப்போது தோனி அடித்த பந்தை பிடித்த ஆடம் ஸம்பா, தோனியை நோக்கி பந்தை எறிவது போல் சைகை செய்தார். இதையடுத்து கோபமடைந்த ரசிகர்கள் உரக்கக் கத்தி ஆடம் ஸம்பாவை மிரட்ட, ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகினர்.

ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அரை சதம் எடுத்தார் தோனி. சிறப்பாக ஆடிய தோனி, 75 பந்துகளில் அரை சதம் கண்டார். இது ஒருநாள் போட்டிகளில் அவருடைய 66-ஆவது அரை சதமாகும். தோனி 88 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்து இந்தியாவைப் பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது. 

இந்த ஆட்டத்தில் அரை சதமடித்ததன் மூலம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 அரை சதங்களை (ஒரு நாள் போட்டியில் 66, டெஸ்டில் 33, டி20 போட்டியில் 1) விளாசிய 4-வது இந்தியர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. சச்சின் 164 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டி: சென்னையில் தோனி

33 v ஆப்பிரிக்கா XI 
139* v ஆப்பிரிக்கா XI
22 v மேற்கிந்தியத் தீவுகள் அணி
113* v பாகிஸ்தான்
15 v தென் ஆப்பிரிக்கா
79 v ஆஸ்திரேலியா

தோனிக்கு சென்னை எப்போதுமே சாதகமான மைதானம்தான். அது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com