இன்று முதல் ஜப்பான் ஓபன்: இரண்டாவது சுற்றில் கடுமையான சவால்களைச் சந்திக்கவுள்ள சிந்து & சாய்னா!

சிந்து, இந்த ஆண்டின் 3-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளார்...
இன்று முதல் ஜப்பான் ஓபன்: இரண்டாவது சுற்றில் கடுமையான சவால்களைச் சந்திக்கவுள்ள சிந்து & சாய்னா!

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 

இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் களம் காணுகின்றனர். சமீபத்தில் கொரியா ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, இந்த ஆண்டின் 3-ஆவது சூப்பர் சீரிஸ் பட்டத்தைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொரிய ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார் சிந்து. இருவருக்கும் இடையே ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதன்மூலம், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் நஜோமியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிந்து. இத்துடன் நஜோமியை 8-ஆவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ள சிந்து, அதில் 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சிந்து - ஒகுஹரா ஆகிய இருவரும் இரண்டாவது சுற்றிலேயே மோதும் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது முதல் சுற்றுகளில் வெற்றி பெற்றால் இரண்டாவது சுற்றில் மீண்டும் சந்திக்க நேரிடும். 

அதேபோல சாய்னா நேவாலுக்கும் கடுமையான இரண்டாவது சுற்று காத்திருக்கிறது. முதல் சுற்றை சாய்னா வெற்றி பெறுகிற பட்சத்தில் இரண்டாவது சுற்றில் இருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்றவரும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான கரோலினா மரினைச் சந்திக்க வாய்ப்புள்ளது. 

சாய்னா நெவால், மீண்டும் கோபிசந்திடம் பயிற்சி பெற்று வருகிற நிலையில் இந்தப் போட்டியில் அவர் பெறுகிற வெற்றி, தோல்விகள் அதனை முன்வைத்து விவாதிக்கப்படும். முன்னதாக, கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா 2011-ஆம் ஆண்டில் தனது பயிற்சியாளரை மாற்றினார். பின்னர் சில மாதங்களிலேயே மீண்டும் கோபிசந்திடம் இணைந்த அவர், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.

2014-ஆம் ஆண்டு கோபிசந்திடம் இருந்து மீண்டும் விலகி, பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் கோபிசந்திடம் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். இதனால் சாய்னாவுக்கு மட்டுமல்லாமல் அவருடைய பயிற்சியாளர் கோபிசந்துக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com