கொல்கத்தாவில் 2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றிநடை தொடருமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது...
கொல்கத்தாவில் 2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றிநடை தொடருமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தர எண்ணுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றுமானால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேநேரத்தில் இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வெல்லுமானால் அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களிலும் உள்ளன.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் காரணமாக, இந்திய அணி தனது பயிற்சியை ரத்து செய்தது. எனினும், ஆஸ்திரேலிய அணியினர் உள் அரங்க வசதிகளைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை பெய்த மழையின் காரணமாக அன்றுமுதல் மைதானம் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் மழை காரணமாக மைதானம் மூடியே இருந்ததால், ஆஸ்திரேலிய அணியினர் உள்அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். மாலையில் மைதானத்தில் நடைபெற இருந்த இந்திய அணியின் பயிற்சி மழை நீடித்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அதனால் இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மாவுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்குவார். 

சமீபகாலமாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் முதல் இரட்டைச் சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டதாகும். எனவே இந்த ஆட்டத்திலும் அவருடைய அதிரடி தொடரும் என நம்பலாம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கிய அஜிங்க்ய ரஹானே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என நம்பலாம்.

மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். எதிரணிகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியாதவரான கோலி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம்பார்க்க காத்திருக்கிறார். 4-ஆவது பேட்ஸ்மேன் இடத்தை மணீஷ் பாண்டே தக்கவைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியிலும் தோனி - பாண்டியா ஜோடி ஆஸ்திரேலியப் பந்துவீச்சைப் பதம் பார்க்கும் என ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

தோனி, கோலி, ரோஹித் சர்மா, தவன் வரிசையில் பாண்டியாவும் இந்திய ஒருநாள் அணியில் தவிர்க்கமுடியாத வீரராகியுள்ளார். சென்னை ஒருநாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து இந்திய ரசிகர்களிடம் மேலும் நம்பிக்கை பெற்றுள்ளார். 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். பாண்டியா-தோனி ஜோடி118 ரன்கள் குவித்தது.

தோனி-பாண்டியா ஜோடி 19.2 ஓவர்களில் 118 ரன்கள் குவித்தது. இந்தியா 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த பாண்டியாவும், தோனியும், இந்தியா 206 ரன்களை எட்டியபோதுதான் பிரிந்தனர். இந்த ஆட்டத்தில் பாண்டியா சந்தித்த கடைசி 21 பந்துகளில் அவருடைய சராசரி 228.57. ஆடம் ஸம்பா வீசிய 37-வது ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார் பாண்டியா. பிறகு பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சென்னை ஒருநாள் போட்டி அவருக்கு என்றென்றும் மறக்காது. கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அக்ஷர் படேலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் கூட்டணி கொல்கத்தாவிலும் தொடரவுள்ளது.  

யுவேந்திர சாஹல் 5 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து மேக்ஸ்வெல் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தாக்குதல் பாணியில் அபாரமாக பந்துவீசக் கூடியவர்களாக இருப்பார்கள். கேப்டன் தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருக்கும்போது, அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அதிக சுதந்திரத்தோடு செயல்பட முடியும். நானும், குல்தீப் யாதவும் தாக்குதல் பாணியிலான பந்துவீச்சாளர்கள் என்பதால் விக்கெட்டை வீழ்த்துவதிலேயே தீவிரம் காட்டுகிறோம். முதலில் குல்தீப் யாதவ் பந்துவீசினால், பந்து எங்கிருந்து சுழல்கிறது, எப்படி எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்துவது என்பது குறித்து நான் அவருக்கு ஆலோசனை சொல்வது வழக்கம். விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் செயல்படுவதால் பாதுகாப்பாகப் பந்துவீசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி பந்துவீச நினைத்தால், வெற்றி பெற முடியாது என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஆரோன் ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஆரம்பக்கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிய மண்ணில் எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவரான டேவிட் வார்னர், இந்த ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார் என நம்பலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்றவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இங்குள்ள சூழல் குறித்து நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் சென்னை ஒருநாள் போட்டியில் நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினார்கள். 

சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை மட்டுமே நம்பியுள்ளது. ஸம்பாவின் ஓவரில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார் பாண்டியா. இந்நிலையில், 2-ஆவது ஒருநாள் ஆட்டத்துக்கு கொல்கத்தாவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆடம் ஸம்பா அதுகுறித்து கூறியதாவது: நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நான் நன்றாகவே பந்துவீசுவேன். ஆனால், எனது பந்துவீச்சு திட்டங்களை ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக சரியான முறையில் பிரயோகிக்கத் தவறிவிட்டேன். நான் வீசிய 3 ஃபுல்டாஸ் பந்துகளையுமே அவர் சிக்ஸர் அடித்தார். ஹார்திக் பாண்டியா போன்ற ஒரு நல்ல வீரருக்கு எதிராக தவறிழைக்கும் பட்சத்தில், அவரை ஆட்டமிழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் விலகிச் சென்றுவிடும். இந்தியா போன்ற துணை கண்டங்களில் விளையாடும்போது, பந்துவீச்சில் நீளம் என்பது முக்கியமான ஒன்று. ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது பந்துவீச்சின் நீளத்தில் சிறிய தவறு செய்தாலும், மைதானத்தின் அளவு காரணமாக அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்தச் சூழ்நிலையில் இருந்து சில விஷயங்களை கற்றுள்ளேன். அடுத்த ஆட்டங்களில் பாண்டியாவை விரைவாகவே வீழ்த்துவேன் என்று நம்புகிறேன் என்று ஆடம் ஸம்பா கூறினார்.

மழையால் ஆட்டம் தடைபடுமா?

'மழை நின்று 2 மணி நேரம் வெயில் இருக்கும் பட்சத்தில் மைதானத்தை ஆட்டத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்த இயலும். இன்னும் இரு நாள்கள் உள்ளதால் சூழ்நிலை சாதகமாக மாறும் என்று நம்புகிறோம்' என மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, புதன்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆட்டம் நடைபெறும் வியாழக்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா. 

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com