2018 ஜனவரியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர்

தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொடர் ஜனவரி

தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தொடர் ஜனவரி 5 அல்லது 6-ஆம் தேதி தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
'ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ' இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (சிஎஸ்ஏ) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகியவை இந்தத் தொடருக்கான தேதிகளை அடுத்த சில நாள்களில் இறுதி செய்யவுள்ளன.
தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி, அங்கு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அந்நாட்டு அணியுடன் விளையாடவுள்ளது.
முன்னதாக, இந்தியா-இலங்கை அணிகள் மோதும் தொடர் டிசம்பர் 24-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்பதால் டிசம்பர் கடைசி வாரம் வரையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு வர இயலாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியிருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் முன்பாக இந்திய அணிக்கு சிறிய இடைவெளி அளிக்க பிசிசிஐ விரும்புகிறது.
இதனிடையே, இந்தத் தொடருக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிசம்பர் இறுதி நாள்களில் தென் ஆப்பிரிக்கா வரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பாக பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடும்' என்றார்.
2018 மார்ச் 1-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான விவகாரத்தில் பிசிசிஐ-க்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே, தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடர் குறித்த தேதியை முடிவு செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com