“பார்ப்பதற்கு வலிமையாக இருப்பதால் நான் பெண் இல்லையா?” செரீனா எழுதியுள்ள கடிதம்!

தான் ஆணைப் போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளதால் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியபோதும், மன வலிமையுடன் தன்னை வளர்த்த அம்மாவிற்கு நன்றி கூறி டென்னிஸ் வீராங்கனை 
“பார்ப்பதற்கு வலிமையாக இருப்பதால் நான் பெண் இல்லையா?” செரீனா எழுதியுள்ள கடிதம்!

தான் ஆணைப் போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளதால் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியபோதும், மன வலிமையுடன் தன்னை வளர்த்த அம்மாவிற்கு நன்றி கூறி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மற்றவர்களைப் போல் ஒரு பெண்ணுக்கான மென்மையான உடல் அமைப்பைப் பெறாமல் வலுவான தசை, பரந்த தோள்பட்டை மற்றும் உறுதியான கைகளை பெற்றிருந்ததால் சிறு வயது முதலே பல விமர்சனங்களுக்குத் தான் உள்ளானதாகவும், ஆனால் அந்த விமர்சனங்கள் தன் மனதைப் பாதித்து ஒரு மூலையில் தன்னை முடக்கிவிடாமல் இருக்க தன் வாழ்க்கைக்குப் பக்க பலமாக விளங்கிய தன் தாய் ஒரெசென் பிரைஸ்க்கு இணையத்தில் உருக்கமான நன்றி கடிதம் ஒன்றை செரீனா எழுதியுள்ளார். 

சமீபத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் செரீனா, அந்தப் பெண் குழந்தையும் தன்னை போன்றே வலுவான கால், கை மற்றும் தசை அமைப்பைப் பெற்றிருப்பதால், சிறு வயது முதல் தான் சந்தித்த அதே அவமானங்கள் மற்றும் சவால்களை தன் மகளும் சந்திக்க நேரிடும் என்பது தனக்கு கவலை தருவதாகவும். தன்னை பற்றிய விமர்சனங்களை தன் அம்மா கையாண்டது போல தன்னால் வரப்போகும் விமர்சனங்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது,

“அன்புள்ள அம்மா,

எனக்குத் தெரிந்த மிகவும் வலிமையான ஒரு பெண்மணி நீ. இதோ என் மகள், ஆம் இப்போது எனக்கொரு மகள் இருக்கிறாள், அவளும் என்னைப் போன்றே வலிமையான கை மற்றும் கால்களை பெற்றிருக்கிறாள் என்று எனக்குத் தெரிகிறது. தன் அம்மாவைப் போன்றே அவளும் மிகவும் கடினமான, சக்தியுள்ள, பலமான உடல் அமைப்புடன் இருக்கிறாள். 15 வயது தொடங்கி இன்று வரை நான் சந்திக்கும் அதே சவால்களை என் மகளும் சந்திக்க போகிறாள், அதை நான் எப்படிச் சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

நான் பார்ப்பதற்கு மிகவும் பலமாக இருந்ததால், என்னைப் பலரும் ஆண் என்று கூறினார்கள். எனது பலத்திற்காக நான் போதைப்பொருள் உட்கொள்வதாகக் குற்றம் சாட்டினார்கள். நான் பெண்கள் பிரிவில் விளையாடத் தகுதி அற்றாவாள் என்றும், மற்ற பெண்களைவிட நான் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிவதால் நான் ஆண்கள் பிரிவில் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் இப்படியொரு நேர்மாறான உடலைப் பெற்றிருப்பதை எண்ணி நான் பெருமைதான் படுகிறேன். 

ஒவ்வொரு நிருபர், அறிவிப்பாளர் மற்றும் என்னை நேரடியாக வெறுப்பவர்கள் யாரும் ஒரு கருப்பின பெண்ணின் மன உறுதியை அறிந்திருக்கவில்லை. மற்ற சில பெண்களைப் போல் நான் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உயரமோ, குள்ளமோ, வளைவுகளுடன் கூடிய உடலோ அல்லது வலிமையான தசைகளை கொண்ட உடலோ அனைத்தும் ஒன்றுதான், நாங்கள் பெண்கள், அதை நாங்கள் பெருமையாகவும் கருதுகிறோம் அவ்வளவுதான்.

நீங்கள் மிகவும் கம்பீரமானவர், உங்களை முந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ஆனால் கடவுள் இன்னும் அதை எனக்கு வழங்கவில்லை, நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. 

நான் அனுபவித்த சில சவால்களை எதிர்கொண்டு அனைத்துக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் மனோபாவம் நான் பெறுவதற்கு நீங்கள்தான் ஒரு முன்மாதிரியாக இருந்தீர்கள். நான் என் மகள் ஒலிம்பியாவிற்கும் அதைக் கற்பிக்க விரும்புகிறேன். 

என்றும் நீ என்னுடன் இருப்பேன் என்று எனக்கு வாக்குக் கொடு. நான் உங்கள் அளவிற்கு வலிமையானவளா என்று நிச்சயம் எனக்குத் தெரியாது. நானும் ஒரு நாள் அங்கு வருவேன் என்று நம்புகிறேன். 

உன்னுடைய ஐந்தாவது இளைய மகள்

செரீனா

இவ்வாறு பெண்மை என்று மற்றவர்களால் கூறப்படும் பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இருந்ததால் தான் சந்தித்த கஷ்டங்களையும் அதில் இருந்து தான் மீளத் துணையாக இருந்த தன் தாய்க்கும் நன்றி கூறி உருக்கமாக அந்தக் கடிதத்தை செரீனா முடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com