ஷிகர் தவன் அணியில் மீண்டும் இடம்பிடித்தால் என்ன ஆகும்?: ரஹானே பதில்! 

தவனுக்குப் பதிலாக ரஹானே தொடக்க வீரராகக் கடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார்...
ஷிகர் தவன் அணியில் மீண்டும் இடம்பிடித்தால் என்ன ஆகும்?: ரஹானே பதில்! 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 17-ம் தேதி தொடங்கியது. அதன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து ஷிகர் தவன் விலகினார். ஷிகர் தவனின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அவரைப் பார்த்துக் கொள்வதற்காக முதல் 3 ஆட்டங்களில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தவன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் ஷிகர் தவனுக்குப் பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. 

தவனுக்குப் பதிலாக ரஹானே தொடக்க வீரராகக் கடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். 3-வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு, தவன் அணிக்குள் மீண்டும் வந்தால் ரஹானேவின் நிலைமை என்ன?

இதுபற்றி ரஹானேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நாளை என்ன நடக்கும் என்று நான் யோசிக்கமாட்டேன். இன்று கிடைத்துள்ள வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன். நிகழ்காலத்தில் நடப்பது குறித்துதான் யோசிப்பேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்னுடைய திட்டங்களைப் பயன்படுத்தி ரன்களைக் குவிக்க மட்டுமே முயற்சி செய்வேன். அணிக்காகப் பங்களிப்பது தான் என்னுடைய முக்கியப் பணி, ஷிகர் தவன் மீண்டும் அணிக்குள் திரும்பினால் என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது என்றார். 

ரஹானே மேலும் கூறியதாவது: வலைப்பயிற்சியின்போது அணியினரை சச்சின் வந்து சந்தித்தார். என்னுடைய திறமையில் நம்பிக்கை வைக்கும்படி அறிவுரை கூறினார். சரியான மனநிலையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். அவருடன் பேசியதிலிருந்து நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இந்தூரில் நாளை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com