காயம் உண்டானதைப் பயன்படுத்தி ஒரு ரன் ஓடுவதா? கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேத்யூ வேட்! (வீடியோ)

கோலியுடன் நீங்கள் சண்டை போட்டால் மேலும் 10 மடங்கு சிறப்பாக விளையாடக்கூடியவர்...
காயம் உண்டானதைப் பயன்படுத்தி ஒரு ரன் ஓடுவதா? கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேத்யூ வேட்! (வீடியோ)

வாக்குவாதங்கள், பரபரப்பான பேட்டிகள் இல்லாமல் இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கிடையே ஒரு டெஸ்ட் தொடரோ ஒருநாள் தொடரோ நடைபெற்று விடுமா?

கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ஒரு ரன் ஓடிய கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுச் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் ஆஸி. விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்!

33-வது ஓவரின் போது ஸ்டாய்னிஸ் வீசிய பந்தைச் சரியாகப் பிடிக்கவில்லை மேத்யூ வேட். பந்து அவர் கையில் பட்டதில் வேடுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பந்தைத் தவறவிட்டார். பந்து வேறுபக்கம் சென்றதால் உடனே இதைக் கண்ட கோலியும் ஜாதவ்வும் ஒரு ரன் எத்தார்கள். இதில் பந்துவீச்சாளர் ஸ்டாய்னிஸும் வேடும் கடுப்பானார்கள்.

விக்கெட் கீப்பருக்குக் காயம் ஏற்படும்போது ரன் எடுப்பது தவறு என்று முதலில் வாக்குவாதத்தை ஆரம்பித்தார் ஸ்டாய்னிஸ். இந்த வாக்குவாதத்தை மேத்யூ வேடும் தொடர்ந்தார். அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

உங்களைப் போல் நானும் அழுதிருக்கலாம். ஓய்வறைக்கு உங்களைப் போல சென்று அங்கு அழுதிருக்கலாம். உங்களுக்காக அனைவரும் வருத்தப்படவேண்டும் என்று கோலியிடம் ஆவேசமாகக் கூறினார் வேட். இதைக் கேட்ட கோலியும் பதிலுக்கு ஏதோ சொல்ல இருவருக்குமிடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. கோலி என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. 

ஆனால் கோலியின் செயலுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. ஆஸியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளாக் இந்த விவகாரம் குறித்துக் கூறும்போது, இந்தியர்கள் ஒரு ரன் தான் எடுத்தார்கள். சரியாக ஃபீல்டிங் செய்யாததால் ரன் எடுத்தார்கள். கீப்பருக்குக் காயம் ஏற்பட்டது குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்குத் தெரிந்ததா என்பது முக்கியமில்லை. இது தான் ஆஸி. அணியின் மிகப்பெரிய பிரச்னையா? நான் மேத்யூ வேடாகவோ அல்லது ஸ்டாய்னிஸாக இருந்திருந்தால் அதைவிடவும் என்னுடைய கிரிக்கெட் திறமை, பங்களிப்பில்தான் கவனம் செலுத்துவேன். கோலியுடன் நீங்கள் சண்டை போட்டால் மேலும் 10 மடங்கு சிறப்பாக விளையாடக்கூடியவர் என்று ஆஸி. அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com