ஆரோன் ஃபிஞ்ச் சதம்: இந்தியாவுக்கு 294 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தூரில் நடக்கும் 3-ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்கள் குவித்தது. ஆரோன் ஃபிஞ்ச் சதமடித்தார்.
ஆரோன் ஃபிஞ்ச் சதம்: இந்தியாவுக்கு 294 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.

துவக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். மொத்தம் 125 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 124 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 42 ரன்கள் சேர்த்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் அரைசதம் கடந்தார். 5 பவுண்டரிகளின் உதவியுடன் 63 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடுத்த களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 5, டிராவிஸ் ஹெட் 4, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 3 என ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியி்ன் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களாக இருந்தது. அப்போது 50 ஓவர்களின் முடிவில் 350-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை கட்டுப்படுத்தினர்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். ஆஷ்டன் ஆகர் 9 ரன்களுடன் உடனிருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல், பாண்டியா 1 விக்கெட் எடுத்தனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இப்போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com