இந்தூரில் இன்று 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தூரில் சனிக்கிழமை  வலைப் பயிற்சியில் ஈடுபட்ட  இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்தூரில் சனிக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முதல் இரு ஆட்டங்களில் அபார வெற்றி கண்ட இந்திய அணி, 3-ஆவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் காணுகிறது.
பாண்டே நீக்கம்? இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் அசத்தலாக ஆடிய அஜிங்க்ய ரஹானே இந்த ஆட்டத்திலும் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா, கடந்த இரு ஆட்டங்களிலும் விரைவாக வெளியேறிவிட்டார். எனவே அவர் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என நம்பலாம்.
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி, இந்திய அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். கடந்த ஆட்டத்தில் 92 ரன்கள் குவித்த அவர், இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் ரன் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
4-ஆவது இடத்தில் களமிறங்கி வரும் மணீஷ் பாண்டே கடந்த இரு ஆட்டங்களில் சோபிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் டக் அவுட்டான அவர், 2-ஆவது ஆட்டத்தில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். எனவே அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்புள்ளது. 
5-ஆவது இடத்தில் களமிறங்கி வரும் கேதார் ஜாதவ், தனது இடத்தைத் தக்கவைப்பதற்கு ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 
6 மற்றும் 7-ஆவது இடங்களில் விக்கெட் கீப்பர் தோனியும், ஆல்ரவுண்டர் பாண்டியாவும் அபாரமாக ஆடி வருகின்றனர். முதல் ஆட்டத்தில் 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்த பாண்டியா, 2-ஆவது ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி ஸ்மித் உள்ளிட்ட இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். உலகின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ள பாண்டியா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பின்வரிசையில் புவனேஸ்வர் குமார் பலம் சேர்க்கிறார்.
மிரட்டும் புவனேஸ்வர், குல்தீப்: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியாஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார், இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நம்பலாம். 
சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது. கடந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார். மேக்ஸ்வெலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சாஹல் இருக்கிறார். கடந்த இரு ஆட்டங்களிலும் சாஹல் பந்துவீச்சில்தான் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.
திணறும் ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் கவலையளிப்பதாக உள்ளது. கடந்த இரு ஆட்டங்களிலும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், இந்த ஆட்டத்தில் தாக்குப்பிடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் திகழ்கிறார்கள். எனினும் அவர்களால் இதுவரையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கடந்த ஆட்டத்தில் ஸ்மித் அரை சதம் கண்டார். எனினும் வார்னர் கடந்த இரு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினார். 
எனவே இந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும். 
ஆரோன் ஃபிஞ்ச்: அந்த அணியின் முன்னணி தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்ச் தசை நார் முறிவு காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. எனினும் அவர் சனிக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் 3-ஆவது ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம்பெறும்பட்சத்தில், கடந்த இரு ஆட்டங்களில் சோபிக்காத இளம் வீரரான ஹில்டன் கார்ட்ரைட் நீக்கப்படுவார். 
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வேடுக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இடம்பெறுவார் என தெரிகிறது. பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் பலம் சேர்க்கிறார். எனினும் இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும்.
கோல்ட்டர் நீல்: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ் ஜோடி பலம் சேர்க்கிறது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் கோல்ட்டர் நீல், இந்த ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் ஆஷ்டன் அகருக்குப் பதிலாக ஆடம் ஸம்பா இடம்பெறலாம் என தெரிகிறது.


ரஹானேவுக்கு யோசனை வழங்கிய சச்சின்!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரஹானே கடந்த 4 நாள்களாக மும்பையில் வலைப் பயிற்சி பெற்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளார். சச்சினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ரஹானே, மேலும் கூறியிருப்பதாவது: 
கடந்த 4 நாள்களாக மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது சச்சினை சந்தித்தேன். "சில நேரங்களில் அணியில் இடம் கிடைக்கும். சில நேரங்களில் அணியில் இடம் கிடைக்காது. ஆனால் போட்டிக்காக தயார்படுத்திக் கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் நேர்மறையான மனநிலையோடு இருக்க வேண்டும்' என சச்சின் கூறினார். அவர் என்னுடைய ஆட்ட நுணுக்கம் குறித்து எதுவும் பேசவில்லை. உளவியல் குறித்து மட்டுமே பேசினார். 
சச்சின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏராளமான ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியர்கள் எவ்வளவு துல்லியமாக பந்துவீசுவார்கள், அதற்கு நாம் எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றி அவர் எனக்கு யோசனை வழங்கினார். சச்சினிடம் பேசிய பிறகு எனக்குள் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ரஹானே.


மைதானம் எப்படி?

போட்டி நடைபெறவுள்ள இந்தூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகும். மேலும் இது சிறிய மைதானம் என்பதால் அதிக அளவில் சிக்ஸர்கள் பறக்கும். எனவே இந்த ஆட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 


குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்களுடைய ஆட்டத்தில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் தெரிகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் நடுப் பகுதியில் பந்துவீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் அதேவேளையில், ரன்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது. குல்தீபும், சாஹலும் அதை சிறப்பாக செய்கிறார்கள். அவர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது நல்ல விஷயமாகும். 

-அஜிங்க்ய ரஹானே, இந்திய அணியின் தொடக்க வீரர்.


ஆட்டத்தின் நடுப்பகுதியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுகிறபோது, நிதானமாக ஆடி, விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை சரியாக செய்துவிட்டால், யார் பந்துவீசினாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

-டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய துணை கேப்டன்

இந்தியா (உத்தேச லெவன்) அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.


ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்) டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா/ஆஷ்டன் அகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com