டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடம்! டி20 போட்டியில்?

2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது...
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடம்! டி20 போட்டியில்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் 125 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்கள் எடுத்தார். எனினும், இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா (71), அஜிங்க்ய ரஹானே (70), ஹார்திக் பாண்டியா (78) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 294 என்ற வலுவான இலக்கை எளிதாக எட்டியது இந்தியா. ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது.

தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரை விரைவாக கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டி20 தரவரிசையில் மட்டும் இந்திய அணி 5-வது இடத்தில்தான் உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை டி20 தரவரிசையில் பிடித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com