தொடர்ச்சியாக 10 வெற்றிகள்: பெங்களூரில் சாதனை படைக்குமா கோலி படை?

பெங்களூர் ஒருநாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது... 
தொடர்ச்சியாக 10 வெற்றிகள்: பெங்களூரில் சாதனை படைக்குமா கோலி படை?

ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 11 ரன்கள் இந்திய அணி தோற்றது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. 2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது.

அடிலெய்டில் பாகிஸ்தானை வென்றபிறகு அதாவது ஜனவரி 26-க்குப் பிறகு இதுவரை ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவில்லை. வெளிநாட்டில் விளையாடிய கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி கண்டுள்ளது.  

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள இந்திய அணி, 4-வது ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் நெருக்கடி தரும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றி பெற போராடும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா (71), அஜிங்க்ய ரஹானே (70), ஹார்திக் பாண்டியா (78) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 294 என்ற வலுவான இலக்கை எளிதாக எட்டியது இந்தியா. இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரை விரைவாக கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறவில்லை. ஷிகர் தவனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் முதல் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்த நிலையில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் கணுக்கால் காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்காத ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல், கடைசி 2 ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அக்ஷர் படேலுக்கான மாற்று வீரராக இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் அசத்தலாக ஆடிய ரோஹித் சர்மா - அஜிங்க்ய ரஹானே இந்த ஆட்டத்திலும் ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா, முதல் இரு ஆட்டங்களில் விரைவாக வெளியேறிவிட்டார். ஆனால் 3-வது போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா, 62 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். ரஹானே 76 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்தார். எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் முதல் இரட்டைச் சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டதாகும். ரஹானே மீண்டும் ரன்கள் குவிக்கத் தொடங்கியிருப்பது இந்திய அணியின் பேட்டிங் பலத்தை நிரூபிக்கிறது. ரஹானே, இந்தமுறையும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, இந்திய அணியில் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என நம்பலாம்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி, இந்திய அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். பெங்களூர் ஐபிஎல் அணியின் கேப்டனான கோலி, பெங்களூரில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் ரன் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்தில் களமிறங்கி வரும் மணீஷ் பாண்டே, கடந்த போட்டியில் நன்கு விளையாடியதால் மீண்டுமொருமுறை அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. கேதார் ஜாதவ், தனது இடத்தைத் தக்கவைப்பதற்கு ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஒரு நாள் தொடரில் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் பாண்டியா. அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.  முதல் ஆட்டத்தில் 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்த பாண்டியா, 2-ஆவது ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி ஸ்மித் உள்ளிட்ட இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். உலகின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ள பாண்டியா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தூரில் சோதனை அடிப்படையில் 4-வது இடத்தில் ஹார்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாண்டியா, வந்த வேகத்தில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசினார். பாண்டியா 72 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

சிக்ஸர்களை விளாசும் திறனை ஒரே இரவில் வளர்த்துக் கொள்ளவில்லை. இளம் வயது முதலே சிக்ஸர் விளாசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என பாண்டியா தெரிவித்துள்ளார். எந்த மாதிரியான ஷாட்டை ஆடப் போகிறோம் என்பதை தீர்மானிப்பதற்கு முன்பாக போட்டியின் சூழலை நன்றாக அறிந்துகொள்வது முக்கியமாகும். சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முடியும் என நினைத்தேன். அதனால்தான் 7 ஓவர்கள் நிதானம் காட்டினேன். எனக்கான நேரம் வந்தபோது அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டேன். என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும், அதை நான் சவாலாக நினைக்கமாட்டேன். மாறாக அதை எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக் கொள்வேன்.  4-வது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டபோது, நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் இந்த ஆட்டத்தில்தான் நான் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறப்பானதாகும் என்றார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியாஆகியோர் பலம் சேர்க்கின்றனர். எனவே இருவரும் இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என நம்பலாம். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது. 2-வது போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார். மேக்ஸ்வெலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சாஹல் இருக்கிறார். கடந்த மூன்று ஆட்டங்களிலும் சாஹல் பந்துவீச்சில்தான் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணியில் ஹில்டன் கார்ட்ரைட், மேத்யூ வேட் ஆகியோருக்குப் பதிலாக ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்தத் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் 125 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் திகழ்கிறார்கள். எனினும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஓரளவு கவலையளிப்பதாகவே உள்ளது. டேவிட் வார்னரும் ஃபிஞ்சும் ஆஸ்திரேலியாவுக்குச் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும். டேவிட் வார்னர், தனது நூறாவது ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளார். 

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வேடுக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இந்தமுறையும் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் பலம் சேர்க்கிறார். ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்றவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இங்குள்ள சூழல் குறித்து நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். 

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ் ஜோடி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஆடம் ஸம்பா இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

இந்திய அணி பெங்களூர் ஒருநாள் போட்டியை வென்றால் அந்த அணியின் தொடர்ச்சியான 10-வது வெற்றியாக அமையும். இதுவரை இந்திய அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் வென்றதில்லை. எனவே பெங்களூரில் இந்திய அணி சாதனை படைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமா?

பெங்களூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி அங்கு 54 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

இந்த மழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என்றும், அடுத்தச் சில தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூர் ஒருநாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரையில் மழை நின்றதும் மைதானத்தின் ஈரப்பதத்தை நீக்கி உடனடியாக ஆட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. எனினும் மழை நின்றால் மட்டுமே போட்டியை நடத்த முடியும். மாறாக மழை தொடருமானால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். 

இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா. 

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ்/ஜேம்ஸ் ஃபாக்னர், ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com