ஆஷஸ் தொடரில் துணை கேப்டன் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

ஆஷஸ் தொடரில் துணை கேப்டன் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிரெய்க் ஓவர்டன், பென் ஃபோக்ஸ், மேசன் கிரேன் ஆகிய மூன்று புதுமுகங்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், பிரிஸ்டோலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக கைதாகி விடுதலையானார். இந்நிலையில் அவரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், நவம்பர் 23 அன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. ஜனவரி 8 அன்று சிட்னியில் நிறைவுபெறுகிறது.

இரவு நேர கேளிக்கை விடுதியில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக கைதாகி விடுதலையான பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவருடன் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும், இன்று நடைபெற்று வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸை கைது செய்தனர். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இதேபோல் அலெக்ஸ் ஹேல்ஸும் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அணியினருடன் லண்டன் செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை மற்றும் கையில் காயம் போன்ற நிலைமையிலும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஸ்டோக்ஸ், துணை கேப்டன் பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பெர்ஸ்டோவ், ஜேக் பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலாஸ்டர் குக், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், டேவிட் மாலன், கிரெய்க் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com