தமிழ் தலைவாஸ் 'த்ரில்' வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் 'த்ரில்' வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும். 
முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-20 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த தமிழ் தலைவாஸ் அணி, கேப்டன் அஜய் தாக்குரின் அபார ஆட்டத்தால் 'த்ரில்' வெற்றி கண்டது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சன் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு சச்சினின் அபார ரைடால் 6-ஆவது நிமிடத்தில் 6-5 என முன்னிலை பெற்றது குஜராத். 
பின்னர் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 11-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸை ஆல்அவுட்டாக்கியதோடு, 13-6 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. இதன்பிறகு அஜய் தாக்குரின் அபார ரைடால் தமிழ் தலைவாஸுக்கு சில புள்ளிகள் கிடைத்தன. அதேநேரத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 20-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து அபாரமாக ஆடிய குஜராத் அணி, 25-ஆவது நிமிடத்தில் 2-ஆவது முறையாக தமிழ் தலைவாஸை ஆல்அவுட்டாக்கியது. இதனால் குஜராத் அணி 27-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 30-ஆவது நிமிடத்தின் முடிவில் குஜராத் அணி 30-20 என்ற கணக்கில் முன்னிலை பெற, அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி 5 நிமிடங்களில் அசுர வேகத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. 38-ஆவது நிமிடத்தில் 28-34 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-34 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. ஆனால் மனம் தளராத கேப்டன் அஜய் தாக்குர் தனது அபார ரைடால் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, தமிழ் தலைவாஸ் அணி 35-34 என்ற கணக்கில் 'த்ரில்' வெற்றி கண்டது.
தமிழ் தலைவாஸ் தரப்பில் கேப்டன் அஜய் தாக்குர் 13 புள்ளிகளையும், பிரபஞ்சன் 9 புள்ளிகளையும் கைப்பற்றினர். குஜராத் தரப்பில் சச்சின் 11 புள்ளிகளை பெற்றுத் தந்தார்.

சொந்த மண்ணில் நம்பிக்கையோடு களமிறங்குவோம்: பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியதாவது: 
அடுத்ததாக நாங்கள் சொந்த மண்ணில் விளையாடவிருக்கிறோம். அங்கு எங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும். அப்போதுதான் சொந்த மண்ணில் நம்பிக்கையோடு ஆட முடியும் என நினைத்தோம். நாங்கள் நினைத்தது போன்றே குஜராத்தை வீழ்த்திவிட்டோம் என்றார். 
இதுவரையில் சென்னை அணி பெரிய வெற்றிகளை பதிவு செய்யவில்லையே என கேட்டபோது, 'புரோ கபடியில் விளையாடும் அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்தவை. எங்கள் அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக களமிறங்கியிருக்கிறது. எங்கள் கேப்டன் அஜய் தாக்குரைத் தவிர, எஞ்சிய அனைவருமே இளம் வீரர்கள்தான். எனவே எடுத்தவுடனேயே மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியாது. இப்போது தோல்வியிலிருந்து மீண்டிருக்கிறோம். வரக்கூடிய ஆட்டங்களில் பெரிய வெற்றிகளை பெற முயற்சிப்போம்' என்றார்.
இன்றைய ஆட்டங்கள்
தெலுகு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர்
நேரம்: இரவு 8
தபாங் டெல்லி-யு.பி.யோதா
நேரம்: இரவு 9
இடம்: தில்லி
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com