எவின் லீவிஸின் 176 ரன்கள் வீண்: இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவிய மழை!

எவின் லீவிஸ் 176 ரன்கள் குவித்தும் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் மே.இ. அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது... 
எவின் லீவிஸின் 176 ரன்கள் வீண்: இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவிய மழை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டிஎல்எஸ் முறையில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. 

மே.இ. அணியின் தொடக்க வீரர் எவின் லீவிஸ் 130 பந்துகளில் 7 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 176 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. எனினும் மழை காரணமாக 36-வது ஓவரின் போது ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து 35.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி டிஎல்எஸ் முறையில் ஆறு ரன்கள் அதிகமாக எடுத்த காரணத்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் 2, ஷாய் ஹோப் 11, மார்லான் சாமுவேல்ஸ் 1 ரன்னில் நடையைக் கட்ட, 6.1 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி விரைவாக ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த எவின் லீவிஸ்-ஜேசன் முகமது ஜோடி அபாரமாக ஆட, மேற்கிந்தியத் தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது. எவின் லீவிஸ் 52 பந்துகளில் அரை சதமடிக்க, ஜேசன் முகமது 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் ஜேசன் ஹோல்டர் களமிறங்க, மறுமுனையில் அபாரமாக ஆடிய லீவிஸ் 94 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 2-வது சதமாகும். இதன்பிறகு வெளுத்து வாங்கிய லீவிஸ் தொடர்ச்சியாக சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால் அவர் 120 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். தொடர்ந்து வேகம் காட்டிய லீவிஸ் 130 பந்துகளில் 176 ரன்கள் சேர்த்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 

லீவிஸ்-ஹோல்டர் ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அதிரடியாக ஆடிய ஹோல்டர் 62 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. பாவெல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கடினமாக இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் வேகமாக ரன்களைக் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 18-வது ஓவரில் 126 ரன்கள் குவித்த நிலையில் ராய் 84 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 39 ரன்களும் ரூட் 14 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். மே.இ. அணியின் பந்துவீச்சு சுமாராக இருந்த நிலையில் ஜோசப் அற்புதமாகப் பந்துவீசி இங்கிலாந்து அணிக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் சாய்த சோசப், அடுத்தடுத்து மார்கன் (19), பில்லிங்ஸ் (2) விக்கெட்டுகளையும் வீழ்த்தி மே.இ. அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும் மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி நெருக்கடி அளித்தார்கள். அதிலும் மொயீன் அலி சிக்ஸும் பவுண்டரியுமாக அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஆறாவது விக்கெட்டுக்கு இருவரும் 77 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது.

இங்கிலாந்து அணி 35.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது டிஎல்எஸ் முறையை விடவும் இங்கிலாந்து அணி 6 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடரமுடியாமல் போனது. இதையடுத்து இங்கிலாந்து அணி டிஎல்எஸ் முறையில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எவின் லீவிஸ் 176 ரன்கள் குவித்தும் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் மே.இ. அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com