வார்னர் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 
வார்னர் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா, இந்தியாவின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. முன்னதாக இந்தியா தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்றிருந்தது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்ச் (94), டேவிட் வார்னர் (124) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 35 ஓவர்களில் 231 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தது.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக முகமது சமி, உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகருக்குப் பதிலாக மேத்யூ வேட், ஆடம் ஸம்பா ஆகியோர் இடம்பெற்றனர். 
முதல் விக்கெட்டுக்கு 231: இதில் டாஸ் வென்ற ஆஸ்திúலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்ய, ஆரோன் ஃபிஞ்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். முகமது சமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார் ஆரோன் ஃபிஞ்ச். மறுமுனையில் வார்னரும் அசத்தலாக ஆட, முதல் 10 ஓவர்களில் 63 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. 
அதிரடியாக ஆடிய வார்னர், அக்ஷர் படேல் வீசிய 15-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டி, 45 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய வார்னர், சாஹல் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனிடையே மறுமுனையில் நிதானமாக ஆடிய ஆரோன் ஃபிஞ்ச் 65 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இதன்பிறகு அதிரடியில் இறங்கிய ஃபிஞ்ச், அக்ஷர் படேல், சாஹல் ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். அதைத் தொடர்ந்து கேதார் ஜாதவ் வீசிய 31-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசி, 103 பந்துகளில் சதம் கண்டார் வார்னர். அவர், ஒரு நாள் போட்டியில் அடித்த 14-ஆவது சதம் இது. இதனால் 32-ஆவது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. 
இதன்பிறகு அக்ஷர் படேல் வீசிய 34-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசிய வார்னர், ஆஸ்திரேலியா 35 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 119 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்து ஜாதவ் பந்துவீச்சில் படேலிடம் கேட்ச் ஆனார். 
ஆரோன் ஃபிஞ்ச் 94: இதையடுத்து டிராவிஸ் ஹெட் களமிறங்க, உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் குவித்தார். இதன்பிறகு வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 29 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் குறைந்தது. 
கடைசிக் கட்டத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டு ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 71 ரன்களைக் கொடுத்தபோதிலும், கடைசி நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினார். இதனால் முதல் 40 ஓவர்களில் 248 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியால், அடுத்த 10 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
அபார தொடக்கம்: 335 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு அஜிங்க்ய ரஹானே-ரோஹித் சர்மா ஜோடி அபார தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ரஹானே, முதல் 3 ஓவர்களில் தலா ஒரு பவுண்டரியை விளாசினார். ரோஹித் சர்மா தன் பங்கிற்கு 4-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியையும், கம்மின்ஸ் வீசிய 5-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும் விரட்டினார். அதற்கடுத்த இரு ஓவர்களில் ரஹானே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். இதன்பிறகு ரிச்சர்ட்சன் வீசிய 9-ஆவது ஓவரில் ரோஹித் ஒரு சிக்ஸரை விளாச, முதல் 10 ஓவர்களில் 65 ரன்களை எட்டியது இந்தியா. 
இதன்பிறகு ரஹானே 58 பந்துகளில் அரை சதமடிக்க, ஆடம் ஸம்பா வீசிய 17-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி, 42 பந்துகளில் அரை சதம் கண்டார் ரோஹித். இதனால் அந்த ஓவரின் முடிவில் இந்தியா 103 ரன்களை எட்டியது. இந்தியா 106 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ரஹானே 66 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 
ரோஹித் சர்மா 65: இதையடுத்து கேப்டன் கோலி களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 55 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் சேர்த்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதன்பிறகு களம்புகுந்த பாண்டியா, வழக்கம்போல் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்க, கோலி 21 ரன்கள் எடுத்த நிலையில் கோல்ட்டர் நீல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது இந்தியா 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து பாண்டியாவுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 32 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. இந்தியா 37.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்திருந்தபோது பாண்டியாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 40 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். 
இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேதார் ஜாதவ் 54 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் இந்தியா 41.1 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது. இந்தியா 45.4 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்திருந்தபோது கேதார் ஜாதவ் ஆட்டமிழந்தார். அவர் 69 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 
இதன்பிறகு மணீஷ் பாண்டே 33 (25 பந்துகளில்), தோனி 13, அக்ஷர் படேல் 5 ரன்களில் வெளியேற, இந்திய அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
ஆஸ்திரேலியத் தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும், கோல்ட்டர் நீல் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டேவிட் வார்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 


100-ஆவது ஆட்டத்தில் சதம் கண்ட வார்னர்!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் தனது 100-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சதமடித்திருக்கிறார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 100-ஆவது ஆட்டத்தில் சதம் கண்ட 8-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 100-ஆவது ஆட்டத்தில் சதமடித்த முதல் வீரர் வார்னர்தான். 100-ஆவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த 3-ஆவது வீரர் வார்னர். நியூஸிலாந்தின் கிறிஸ் கெயின்ஸ் (1999), மேற்கிந்தியத் தீவுகளின் ராம்நரேஷ் சர்வான் (2006) ஆகியோர் மற்ற இருவர். 
100-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சதம் கண்ட முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையும் வார்னர் வசமாகியுள்ளது. இதற்கு முன்னர் 1991-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜெஃப் மார்ஷ் 81 ரன்கள் குவித்ததே ஆஸ்திரேலியர் ஒருவர் 100-ஆவது ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. 
100 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கும் டேவிட் வார்னர் 4,217 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஆட்டங்களில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின ஹஷிம் ஆம்லா உள்ளார். அவர், 4808 ரன்கள் குவித்துள்ளார்.
முதல் 100 ஆட்டங்களில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் வார்னருக்கு (14 சதம்) 2-ஆவது இடம் கிடைத்துள்ளது. ஹஷிம் ஆம்லா 16 சதங்களுடன் முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 13 சதங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதுதவிர இந்தியாவுக்கு எதிராக 124 ரன்கள் குவித்ததன் மூலம் 100-ஆவது ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார் வார்னர். மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (132*), பாகிஸ்தானின் முகமது யூசுப் (129) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com