காமன்வெல்த் கேம்ஸ்: டேபிள் டென்னிஸ் மற்றும் பாட்மிண்டனில் இந்தியாவுக்குத் தங்கம்!

இந்திய அணி 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தமாக 19 பதக்கங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது...
காமன்வெல்த் கேம்ஸ்: டேபிள் டென்னிஸ் மற்றும் பாட்மிண்டனில் இந்தியாவுக்குத் தங்கம்!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றது. இதேபோல பாட்மிண்டன் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

நேற்று நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலமாக, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியது இந்திய மகளிர் அணி. இந்நிலையில் இந்திய ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக இந்திய அணி மோதியது.

ஷரத் கமல் நைஜீரியாவின் போட் அபியோடனை வீழ்த்தி இந்திய அணிக்கு 1-0 என்கிற முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்த ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன் சீகன் டோரியோலாவை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய அணிக்கு 2-0 என்கிற வலுவான முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி ஒரு வெற்றியைப் பெற்றாலே தங்கம் உறுதி என்கிற நிலைமை உருவானது. இரட்டையர் ஆட்டத்தில் சத்யன் - ஹர்மீத் ஜோடி வென்று இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்கள். இதனால் நைஜீரியாவுக்கு எதிரான இறுதிச்சுற்று ஆட்டத்தை இந்திய அணி 3-0 என்கிற கணக்கில் வென்று தங்கம் வென்றது. இந்திய ஆடவர் அணி கடந்த 2006-ஆம் ஆண்டு மெல்போர்னில் தங்கம் வென்றிருந்தது.

24 மணி நேரத்தில் டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இந்திய அணிக்குத் தங்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்கள்.

இதையடுத்து பாட்மிண்டன் விளையாட்டிலும் இந்திய அணி தங்கம் வென்றது.

நேற்று நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் அரையிறுதியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. இந்தியா தனது இறுதிச்சுற்றில், 3 முறை சாம்பியனான மலேசியாவைச் சந்தித்தது. 

அஸ்வின்-சாத்விக் ஜோடி 21-14, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இந்தியாவுக்கு 1-0 என்கிற முன்னிலையை அளித்தார்கள். அடுத்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், லீ சாங் வீ-யை 21-17, 21-14 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். அடுத்த ஆண்களுக்கான இரட்டையர் ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஷெட்டி, 15-21, 20-22 என்ற நேர் செட்களில் ஷெம் - வீ கியோங் ஆகியோரிடம் தோல்வியடைந்தார்கள். எனினும் இந்திய அணி 3 ஆட்டங்களின் முடிவில் 2-1 என முன்னிலையில் இருந்தது. 

4-வது ஆட்டத்தில் சாய்னா நெவால் - சோனியா சீயா மோதினார்கள். இதில் சாய்னா 21-11, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் வென்றார். இதனால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இந்த காமன்வெல்த் கேம்ஸில் இந்திய அணி வெல்லும் 10-வது தங்கமாகும் இது.

பதக்கப்பட்டியலில் இந்திய அணி 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தமாக 19 பதக்கங்களுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com