2022 காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறுமா? இந்திய வீரர்கள் எதிர்பார்ப்பு

வரும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதால் இந்திய துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல்
2022 காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறுமா? இந்திய வீரர்கள் எதிர்பார்ப்பு

வரும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதால் இந்திய துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பிரிட்டிஷ் முடியாட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளை இணைத்து காமன்வெல்த் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 56 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றின் மத்தியில் தோழமையையும், விளையாட்டில் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும் வருகின்றன. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
இதில் துப்பாக்கி சுடுதல் மிகவும் பிரதான இடம் வகிக்கிறது. ஆடவர், மகளிருக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்றவை ஆதிக்கம் செலுத்திய நிலையில் 1994-ஆம் ஆண்டு போட்டிகள் முதல் இந்திய வீரர்களும் முத்திரை பதித்து வருகின்றனர்.
ஜஸ்பால் ராணா, சமரேஷ் ஜங், ஓம்கார் சிங் போன்றோர் 15 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்தனர். 25 மீ ஃபையர் பிஸ்டர் பிரிவில் ஜஸ்பால் ராணா தொடர்ந்து ஹாட்ரிக் தங்கம் வென்றார். தொடர்ச்சியாக விஜயகுமார், குர்பீரித் சிங், பன்வர்லால், அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோரும் நாட்டுக்கு பதக்கங்களை பெற்றுத் தந்தனர். தொடர்ந்து பல போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் இடம் பெற்று வருகிறது.
கடந்த 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் அபிநவ் பிந்த்ரா, அபூர்வி சந்தேலா, ராஹி சர்னோபட் உள்ளிட்டோர் துப்பாக்கி சுடுதலில் 4, 9 வெள்ளி,4 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்றனர். அதோ போல் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளிலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
ஜித்துராய், மானுபாக்கர், ஹீனா சித்து, ஷ்ரேயாசிசிங், தேஜஸ்வனிசாவந்த், அனிஷ் பன்வாலா, சஞ்சீவ் ராஜ்புத் உள்ளிட்டோர் தங்கமும், ஹீனா சித்து, மெஹுலி கோஷ், தேஜஸ்வனி சாவந்த் வெள்ளியும், ஓம் மித்ரவால், ரவிக்குமார், அபூர்வி சந்தேலா, அங்கூர் மிட்டல் உள்ளிட்டோர் வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் வெல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியாணாவைச் சேர்ந்த 16 வயதே ஆன மானு பாக்கர் 10 மீ ஏர் பிஸ்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 25 மீ ரேபிட் ஏர் பிஸ்டர் பிரிவில் அனிஷ் பன்வாலா தங்கம் வென்ற முதல் இளம் இந்திய வீரர் ஆனார்.
சர்வதேச அளவில் துப்பாக்கி சுடுதலில் பிரகாசிக்க இந்திய வீரர்,வீராங்கனைகளுக்கு காமன்வெல்த் போட்டிகள் சரியான தளமாக விளங்கி வருகிறது. இதற்கிடையே வரும் 2022-இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் அடுத்த காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ளன. 
அதில் துப்பாக்கி சுடுதல் இடம் பெறாது என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் வீரர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி கூட்டமைப்பு (சிஜிஎப் ) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுப்பேரவைக் கூட்டத்தில் துப்பாக்கி சுடுதலை விருப்ப விளையாட்டாக வைத்திருக்க ஒப்புதல் பெறப்பட்டது. 
சிஜிஎப் முதன்மை செயல் அலுவலர் டேவிட் கிரெவெம்பெர்க்கும் இதுதொடர்பாக அனைத்துகூட்டமைப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். பர்மிங்ஹாம் விளையாட்டு அமைப்புக் குழு, டேபிள் டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம், சைக்கிளிங், டைவிங், 3-3 கூடைப்பந்து, உள்ளிட்டவற்றை விருப்ப விளையாட்டுக்களாக வைத்துள்ளது. அனைத்து வகையான வாய்ப்புகளையும் ஆராய்ந்தே விருப்ப விளையாட்டுகள் முடிவு செய்யப்பட்டன. இதில் எந்த மாறுதலும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரத்தோர் வலியுறுத்தல்
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றவருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இதுதொடர்பாக சிஜிஎப் கூட்டமைப்புத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். துப்பாக்கி சுடுதலை தவறாமல்2022 போட்டிகளில் இடம் பெறச் செய்ய வேண்டும். இதற்காக தயாராகி வரும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பே (சிஜிஎப்) எடுக்க வேண்டும். இதனால் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

*பிரிட்டிஷ் முடியாட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளை இணைத்து காமன்வெல்த் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 56 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றின் மத்தியில் தோழமையையும், விளையாட்டில் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும் *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com