தங்கம் வென்ற ஹரியானா வீரருக்கு ரூ. 1.50 கோடி ஊக்கத் தொகை! தமிழக வீரருக்கு?

இந்திய அணி வென்ற 66 பதக்கங்களில் அதிக பதக்கம் வாங்கிய மாநிலம் என்கிற பெருமையை ஹரியானா பெற்றுள்ளது...
தங்கம் வென்ற ஹரியானா வீரருக்கு ரூ. 1.50 கோடி ஊக்கத் தொகை! தமிழக வீரருக்கு?

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். தங்கம் வெல்வோருக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் பெறுவோருக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார். இதன்படி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை - ரூ. 50 லட்சம்.

கடந்த 4-ம் தேதி கோல்ட்கோல்ஸ்ட் காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்றது. 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வென்ற 66 பதக்கங்களில் அதிக பதக்கம் வாங்கிய மாநிலம் என்கிற பெருமையை ஹரியானா பெற்றுள்ளது. 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என அந்த மாநிலம் 22 பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இந்தியா சர்பாக கலந்துகொண்ட 218 வீரர்களில் 38 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

தங்கம் வென்ற ஹரியானா வீரர்களுக்கு அந்த மாநில அரசு ரூ. 1.50 கோடியும் வெள்ளிக்கு ரூ. 75 லட்சமும் வெண்கலத்துக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஹரியானா வீரர்களுக்குக் கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் தமிழக வீரர்களுக்குக் கிடைக்கிறது.

இதுதவிர காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் குரூப் ஏ அரசுப் பதவிகள் வழங்கப்படும். மற்ற பதக்கங்கள் பெற்ற ஹரியானா வீரர்களுக்கு குரூப் பி, குரூப் சி அரசுப் பணிகள் வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.  துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான அனிஷ் பன்வாலா, மனு பாக்கர் ஆகியோர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.

மாநில அரசு இதுபோன்ற ஊக்கத்தொகையையும் அரசு வேலைகளையும் தாராளமாக வழங்குவதால் தான் ஹரியானா வீரர்கள் நாட்டிலேயே மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாகப் பெயர் பெற்றுள்ளார்கள். 2006 காமன்வெல்த் போட்டியில் மொத்தமாக 5 ஹரியானா வீரர்களே பதக்கம் (1 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம்) பெற்றார்கள். 2010-ல் இது 32 பதக்கங்களாக உயர்ந்தது. 2014-ல் 19 பதக்கங்களைப் பெற்ற ஹரியானா, இந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 22 பதக்கங்களை அள்ளியுள்ளது. 

ஹரியானாவில் உள்ள 22 மாவட்டங்களிலும் 10 விளையாட்டுகளுக்கான 440 விளையாட்டு மையங்களை கடந்த ஒரு வருடத்தில் திறந்துள்ளது அம்மாநில அரசு. மேலும் 15 விளையாட்டுக்களுக்கான 680 மையங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடகள வீரர்களுக்கான சிந்தடிக் தடகள டிராக்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதுபோல தங்கள் மாநிலம் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும், சர்வதேச அரங்கில் பதக்கங்களைக் குவிக்க வேண்டுமென்று மிகவும் மெனக்கெடுகிறது ஹரியானா அரசு. ஊக்கத் தொகையையும் அரசு வேலைகளையும் வாரி வழங்குகிறது. அதனால் விளையாட்டில் நாட்டிலேயே நெ.1 மாநிலமாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com