டேபிள் டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரம் மனிகா பத்ரா 

இந்திய டேபிள் டென்னிஸின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் மனிகா பத்ரா .
டேபிள் டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரம் மனிகா பத்ரா 

இந்திய டேபிள் டென்னிஸின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் மனிகா பத்ரா .
பாட்மிண்டன் விளையாட்டில் சாய்னா நேவால், சிந்து ஆகியோர் உலக அளவில் ஜொலித்து நாட்டுக்கு பெருமை தேடி தருகின்றனர். சாய்னா ஒலிம்பிக், ஆசிய, விளையாட்டுப் போட்டிகளிலும், சிந்து உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். பாட்மிண்டன் விளையாட்டு என்றால் சாய்னா, சிந்து எனக்கூறும் நிலை தற்போதுள்ளது.
டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச அளவில் பெருமை தேடித் தந்து வருகின்றனர். குறிப்பாக ஆடவர் பிரிவில் கமலேஷ் மேத்தா, சரத் கமல், சனில் ஷெட்டி, சத்யன், அமல்ராஜ், உள்ளிட்டோரும், மகளிர் பிரிவில் மதுரிகா பட்கர், மெளமா தாஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் அடங்குவர்.
அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணியினர் 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. உலகின் நான்காம் நிலை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் பலமுறை பதக்கம் வென்றவருமான பெங் டியன்வெயை 58-ம் நிலை வகிக்கும் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வீழ்த்தி இந்தியா தங்கம் வென்று வரலாறு படைக்க உதவினார். இதன் மூலம் சிங்கப்பூர் ஆதிகக்கம் முடிவுக்கு வந்தது.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தற்போது மனிகாவின் பெயர் ஒங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தில்லி நாராயணவிகாரில் 1995-ம் ஆண்டு பிறந்த மனிகா பத்ரமா தனது 4-வது வயது முதல் டேபிள் டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது சகோதரி அன்சல், சகோதரர் சாஹில் ஆகியோரும் உடன் விளையாடினர். 
மாடல் வாய்ப்புகள் நிராகரிப்பு: இளம் வயதில் விளம்பரங்களுக்கான மாடலாக நடிக்கும் பல்வேறு வாய்ப்புகளை மனிகா நிராகரித்தார். 16-ம் வயதில் ஸ்வீடனில் பீட்டர் கார்லசன் பயிற்சி மையத்தில் கிடைத்த வாய்ப்பை கைவிட்டு, விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த 2011-இல் சிலியில் நடைபெற்ற 21-வயதுக்குட்பட்டோர் ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 
தொடர்ந்து 2014-இல் கிளாஸ்கோ காமன்வெல்த்,ஆசியப் போட்டிகளில் பங்கேற்று காலிறுதி வரை தகுதி பெற்றார். இதற்கிடையே 2015-இல் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களை வென்றார். மேலும் 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை மனிகா வென்றிருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
இதற்கிடையே கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் அணிப் போட்டியில் மனிகாவின் அபார ஆட்டம் வெளிப்பட்டது. ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, ஒரு வெண்கலத்தை மனிகா வென்றார்.
22 வயதே ஆன மனிகா தற்போது டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அதிகம் பேசப்படும் நபராக திகழ்கிறார். தனது வெற்றி குறித்து மனிகா கூறியுள்ளதாவது:
காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுஷில்குமார், சிந்து, சாய்னா போன்றோர் என்னை பாராட்டியது மிகவும் பெருமையாக இருந்தது. உலகின் நான்காம் நிலை வீராங்கனை பெங் டியன்வெயை இரண்டு முறை வெற்றி கண்டது மறக்க முடியாதது. இந்தியாவுக்காக விளையாடி பதக்கங்களை குவிப்பதே எனது நோக்கமாகும். அதை தற்போது காமன்வெல்த் போட்டிகள் மூலம் நிறைவேற்றியுள்ளேன். உலகின் ஒன்றாம் நிலையோ அல்லது 400-ம் நிலையோ நான் எதிராளிகளை ஓரே மாதிரியாகத் தான் கருதி விளையாடுவேன். டேபிள் டென்னிஸில் வலுவாக உள்ள சீன, ஜப்பான் வீராங்கனைகளை எதிர்கொள்வதே அடுத்த இலக்கு. காமன்வெல்த் வெற்றி மூலம் இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.

*காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுஷில்குமார், சிந்து, சாய்னா போன்றோர் என்னை பாராட்டியது மிகவும் பெருமையாக இருந்தது. உலகின் நான்காம் நிலை வீராங்கனை பெங் டியன்வெயை இரண்டு முறை வெற்றி கண்டது மறக்க முடியாதது.*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com