கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: டக் வொர்த் லீவிஸ் முறையில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: டக் வொர்த் லீவிஸ் முறையில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றது.
 கொல்கத்தாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்து பஞ்சாப் பேட் செய்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட, அந்த அணி 13 ஓவர்களில் 125 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வென்றது பஞ்சாப்.
 முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த கொல்கத்தாவில் கிறிஸ் லின்-சுனில் நரைன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். சுனில் ஒரு ரன்னுக்கு வெளியேற, லின் அரைசதம் கடந்து நிலைத்தார். சுனிலை தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
 அடுத்து நிதீஷ் ராணா 3 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக் விக்கெட் சரிவை தடுத்து நிலைத்தார். இந்நிலையில், 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்களை எட்டியிருந்த கிறிஸ் லின், 16-ஆவது ஓவரில் ஆன்ட்ரு டை பந்துவீச்சில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 அவரைத் தொடர்ந்து ஆன்ட்ரு ரùஸல் 10 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 6 பவுண்டரிகள் உள்பட 43 ரன்களிலும் பெவிலியின் திரும்பினர். கடைசி விக்கெட்டாக டாம் கரன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, சுபம் கில் 2 பவுண்டரிகள் உள்பட 14, பியுஷ் சாவ்லா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 பஞ்சாப் தரப்பில் பரீந்தர் சரன், ஆன்ட்ரூ டை தலா 2, முஜீப் உர் ரஹ்மான், அஸ்வின் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
 இதையடுத்து பேட் செய்த பஞ்சாபில் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல்-கிறிஸ் கெயில் அதிரடி காட்டினர். அந்த அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. லோகேஷ் ராகுல் 46, கிறிஸ் கெயில் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 பின்னர் தாமதமாகத் தொடங்கிய ஆட்டத்தில், டக் வொர்த் லீவிஸ் முறையில் பஞ்சாப் 4 ஓவர்களில் 29 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாபில் மீண்டும் பேட் செய்த லோகேஷ் அரைசதம் கடந்து 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 27 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
 கெயில்-மயங்க் அகர்வால் கூட்டணி அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. கெயில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 62, மயங்க் அகர்வால் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனார்.
 இன்றைய ஆட்டம்
 ஹைதராபாத்-சென்னை, நேரம்: மாலை 4 மணி
 இடம்: ஹைதராபாத்
 ராஜஸ்தான்-மும்பை, நேரம்: இரவு 8 மணி
 இடம்: ஜெய்பூர்
 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com