'டெஸர்ட் ஸ்ட்ராம்' 20 வருடங்களுக்கு பிறகு நினைவுகூர்ந்தார் சச்சின் டெண்டுல்கர்

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சச்சின் டெண்டுல்கரின் அந்த ஆட்டம் 'டெஸர்ட் ஸ்ட்ராம்' என்றே அழைக்கப்படுகிறது.
'டெஸர்ட் ஸ்ட்ராம்' 20 வருடங்களுக்கு பிறகு நினைவுகூர்ந்தார் சச்சின் டெண்டுல்கர்

ஷார்ஜாவில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஏப்ரல் 22-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் சச்சின் ஆடிய ஆட்டம் 'டெஸர்ட் ஸ்ட்ராம்' என்றே அழைக்கப்படுகிறது. போட்டியின் இடையில் 'மணல் புயல்' ஏற்பட்டாலும் அவரது ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் புயலாய் அமைந்ததால் இந்த பெயர் ஏற்பட காரணமாயிற்று. 

இதுகுறித்து புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

1998-ஆம் ஆண்டு நடைபெற்ற ஷார்ஜா கோப்பை ஒருநாள் தொடர் எனக்கு எப்போதும் மறக்க முடியாதது. ஏனெனில் ஆடுகளத்தில் எனக்கு மிக முக்கிய அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அது அந்த போட்டியின் போது மணல் புயல் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்தி விட்டது. அப்போது நான் முதல் ஆளாக தேடியது கில்கிறிஸ்டை தான். ஏனெனில் நான் அந்த புயலில் அடித்துச் சென்று விடுவேன் என்ற ஐயம் ஏற்பட்டது. எனவே கில்கிறிஸ்டை பிடித்துக்கொண்டு அந்த புயலில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். 

இவை எல்லாம் எங்களை கடந்து சென்றுவிட்டது. ஆட்டமும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது கிரிக்கெட் விதிகளின் படி இந்திய அணிக்கு வெற்றி இலக்கு மாற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்டது. அச்சமயம் எனது மனதில் ஒன்றை தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அது இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டால், பிறகு அதிலும் சிறப்பாக செயல்பட்டுவிடலாம் என்பதுதான். 

இந்த தொடரின் போது நாங்கள் அனைவரும் துபையில் தங்கியிருந்தோம். எனவே போட்டிகளுக்காக ஷார்ஜா வரை வந்துசெல்ல வேண்டியது அவசியம். இதனால் ஓய்வு எடுக்க சிறிது நேரம் மட்டுமே கிடைக்கும். அதுபோல அப்போதெல்லாம் போட்டிக்காக உடலளவில் எவ்வாறு தயாராக வேண்டும், ஓய்வின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. சற்று நினைத்துப் பாருங்கள் இது நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஷார்ஜாவின் வெப்பநிலையும் மிக கடுமையாக இருந்தது. 

இத்தனை இடையூருகளுக்கு மத்தியில் அந்த போட்டியில் களம் கண்டேன். நல்லவேளையாக முதலில் இந்தியா பந்துவீச நேர்ந்தது. அது எனக்கு சற்று ஆறுதலை அளித்தது. அன்றைய காலகட்டத்தில் 270 ரன்கள் என்பது மிகவும் கடினமான இலக்கு. அதுவும் ஆஸ்திரேலிய அணி உலகம் முழுவதும் தங்களின் ஆதிக்கத்தை நிரூபித்துக்கொண்டிருந்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய முதல் 6 ஓவர்கள் எனது ஆட்டத்தின் மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்டது. 

இந்த காத்திருப்புக்கு பின்னர் அந்த துவக்கம் ஏற்பட்டது. காஸ்ப்ரோவிக்ஸின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாசினேன். அதுமுதல் எனக்கு புது உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்பட்டது. பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அந்த தொடரையும் இந்தியா கைப்பற்றியது. 

அந்த சமயம் ஷிவாஜி பார்க்கில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு திரண்டிருந்த ரசிகர்களை கண்டு வியப்படைந்தேன். அவர்கள் எனக்காக ஆரவாரம் செய்ததை என்றும் மறக்க முடியாது. ரசிகர்களின் அன்பு அன்று முதல் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இந்த அனைத்து துவக்கத்துக்கும் ஷார்ஜா தான் முக்கிய காரணம். எனது நண்பர்களுடன் நான் எப்போது உரையாடினாலும் இந்த நினைவுகள் கடந்து செல்லும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com