கிரிக்கெட் காதலர்களின் ஒற்றை மந்திரச் சொல் 'சச்சின்' 

கிரிக்கெட் காதலர்களின் ஒற்றை மந்திரச் சொல் 'சச்சின்' 

லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றெல்லாம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கர், 1973-ஆம் வருடம் ஏப்ரல் 24-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். தற்போது 45-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1989-ஆம் வருடம் நவம்பர் மாதம் 15-ந் தேதி கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் 16 வயதில் பயமறியா இளங்கன்றாய் களம்புகுந்து (முதல் சர்வதேசப் போட்டி) சர்வதேச அளவிலான சாதனை பயணத்தை தொடங்கினார். 

உலகின் முன்னணி வீரர்களில் முக்கிய இடம்பிடித்து, சர் டான் பிராட்மேனுக்கு நிகராகப் புகழப்பட்டார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர், 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர் போன்ற பலதரப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ளார்.

சுமார் 24 வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் ஆவார். எதிரணி வீரர்கள் எத்தனை முறை வசைபாடினாலும் அதை ஒரு புன்னகையுடன் கடந்து சென்று அதற்கான பதிலடியை தனது ஆட்டத்தில் வெளிப்படுத்தியவர். கடைசியாக நவம்பர் 14, 2013 அன்று மே.இ.தீவுகளுடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.

இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற முதல் விளையாட்டு வீரராக திகழ்கிறார். 

இந்தியா, மும்பை, ஆசிய லெவன், மும்பை இந்தியன்ஸ், எம்சிசி, சச்சின் பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் (ஒரு இன்னிங்ஸில்) எடுத்துள்ளார். சராசரி 53.79 ஆகும். 33 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் 6 முறை இரட்டைச் சதம் விளாசியுள்ளார். இவற்றில் 68 அரைசதங்கள் அடங்கும். 

463 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 49 சதங்களை விளாசி 18,426 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் விளாசினார் (சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர்). சராசரி 44.83 ஆகும். 41 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில் 96 அரசைதங்களும் அடங்கும்.

மொத்தம் 664 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை விளாசியுள்ளார்.

  • முதல் டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக நவம்பர் 15, 1989.
  • கடைசி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14, 2013.
  • முதல் ஒருநாள்: பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18, 1989.
  • கடைசி ஒருநாள்: பாகி்ஸதானுக்கு எதிராக மார்ச் 18, 2012. 
  • முதல் ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக மே 14, 2008.
  • கடைசி ஐபிஎல்: சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக மே 13, 2013. ​

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 01, 2006 ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்றுள்ளார்.

ரஞ்சி டிராஃபி, இராணி டிராஃபி மற்றும் திலீப் டிராஃபி உள்ளிட்ட தொடர்களின் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த ஒரே இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர்.

சர்வதேச போட்டியில் கள நடுவர்கள் மேல் முறையீடு செய்து 3-ஆம் நடுவரால் அவுட் வழங்கப்பட்ட முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

கடந்த 1987-ஆம் வருடம் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று வீரர்களிடம் பந்தை எடுத்து வழங்கும் 'பால் பாய்' ஆக பணியாற்றியுள்ளார்.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர் தனது 6 வருட ஊதியத் தொகையான ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துவிட்டார்.

அரங்கம் அதிர்ந்த சச்சின்.....சச்சின்.... என்ற அந்த ஒற்றை மந்திரச் சொல் இன்றளவும் அவரது ரசிகர்களின் நினைவுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com