பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை ராயுடு 82, தோனி 70*

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சென்னை அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை ராயுடு 82, தோனி 70*

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சென்னை அணி அபாரமாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 24-வது ஆட்டம் பெங்களூருவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு தரப்பில் குயின்டன் டி காக், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டி காக், ஏபி டி வில்லியர்ஸ் இணை சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். 
டிகாக், வில்லியர்ஸ் அரை சதம்
8 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் டி வில்லியர்ஸ் 68 ரன்களையும், டி காக் 53 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். கோரே ஆண்டர்சன் 2, 
பின்னர் மந்தீப் சிங் 32, காலின் டி கிராண்ட்ஹோம் 11 ரன்களுக்கும், பவன் நேகி, உமேஷ் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் தாகுர், தாஹிர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
206 ரன்கள் இலக்கு: பின்னர் சென்னை அணி சார்பில் வாட்சன், அம்பதி ராயுடு இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வாட்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சுரேஷ் ரெய்னா 11, சாம் பில்லிங்ஸ் 9, ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் தோனி-அம்பதி ராயுடு இணை பெங்களூரு அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். 
ராயுடு 8 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
19-வது ஓவரை சிராஜ் வீசினார். அதில் தோனி ஒரு சிக்ஸரை விளாசினார். 3 வைடு பந்துகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 14 ரன்களை பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ, தோனி ஆகியோர் அதிரடியாக சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இறுதியாக 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களுடன் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் சஹால்2 விக்கெட்டுகளையும், பவன் நேகி, உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
எங்கள் அணி பந்துவீசிய விதத்தை ஏற்க முடியாது. 200 ரன்களை எடுத்தும், அதை தக்க வைக்க முடியவில்லை என்றால் பல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் கசப்பான மாத்திரையாகும். ஆடுகளம் நன்றாக இருந்தது. இரு அணிகளுக்கும் சுழற்பந்து வீச்சு நன்றாக இருந்தது. இரு அணி வீரர்களுமே சிறப்பாக பேட் செய்தனர். தோனி பந்துகளை சிறப்பாக அடித்து ஆடினார்.
- விராட் கோலி,
பெங்களூரு அணியின் கேப்டன்.
பெங்களூரு அணியின் ஸ்கோரை எட்டமுடியுமா என மலைப்பாக இருந்தது. டி வில்லியர்ஸ் சிறப்பாக ஆடியதால் 200 ரன்களை அவர்கள் பெற்றனர். எங்கள் அணியின் இடதுகை ஆட்டக்காரர்களை விரைவில் இழந்து விட்டோம். ராயுடு சிறப்பாக ஆடினார். பிரோவோவும் இறுதியில் அடித்து ஆடினார். பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்து வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினர்.
- எம்.எஸ். தோனி,
சென்னை அணியின் கேப்டன்.
இதுவரை அதிகம்...
அதிக ரன்கள் 

சென்னை சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு இதுவரை 6 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் உள்பட 283 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 82 ரன்களை ராயுடு எடுத்துள்ளார். ஏபி டி வில்லிர்யஸ் வசம் இருந்த ஆரஞ்சு கேப் அம்பதி ராயுடுவிடம் வந்துள்ளது.
அதிக விக்கெட்
மும்பை அணியின் மயங்க் மார்கண்டே 6 போட்டிகளில் பங்கேற்று 143 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பர்ப்பிள் கேப் அவர் வசமே உள்ளது.

இன்றைய ஆட்டம்
ஹைதராபாத்-பஞ்சாப் 
நேரம்: இரவு 8.00, இடம்: மொஹாலி.
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com