பாகிஸ்தான் ஹாக்கி வீரருக்கு இலவசமாக இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தயார்: இந்திய மருத்துவமனை அறிவிப்பு!

பாகிஸ்தான் ஹாக்கி முன்னாள் வீரர் மன்சூர் அஹ்மத்துக்கு இலவசமாக இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்ய..
பாகிஸ்தான் ஹாக்கி வீரருக்கு இலவசமாக இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்யத் தயார்: இந்திய மருத்துவமனை அறிவிப்பு!

பாகிஸ்தான் ஹாக்கி முன்னாள் வீரர் மன்சூர் அஹ்மத்துக்கு இலவசமாக இதயமாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஃபோர்டிஸ் மருத்துவமனை முன்வந்துள்ளது.

இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு இந்திய அரசு விசா வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் ஹாக்கி முன்னாள் வீரர் மன்சூர் அஹ்மத் (49) சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் தற்போது மன்சூர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மருத்துவர் செளத்ரி பர்வேஷின் அறிவுரையின்படி, அவருக்கு இதயம் சரியாகச் செயல்படாததால், மாற்று இதயம் பொருத்துவதற்காக இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுத்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு கராச்சியில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார் மன்சூர். எனினும் இதய நோய் பிரச்னையிலிருந்து அவர் முழுமையாகக் குணமடையவில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு சுமூகமாக இல்லையென்றாலும் மருத்து உதவி கோரும் பாகிஸ்தானியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்நிலையில் ஃபோர்டிஸ் மருத்துவமனை மன்சூருக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. சென்னை அல்லது மும்பையில் உள்ள தங்களுடைய மருத்துவமனையில் மன்சூருக்கு இலவசமாக இதய அறுவைச் சிகிச்சை செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் காத்திருப்போர் பட்டியலில் இந்தியர் யாரும் இல்லாதபோதுதான் வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். எனவே நான்கு முதல் ஆறு மாதங்கள் கழித்தே மன்சூருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் ஹாக்கி அணி 1992 ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றபோதும் 1994-ல் உலகக் கோப்பையை வென்றபோதும் அந்த அணியில் கோல் கீப்பராக இடம்பெற்றிருந்தார் மன்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com