நடத்தை காரணமாகவே கம்பீர் நீக்கப்பட்டார்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல்

நடத்தை காரணமாகவே கௌதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
நடத்தை காரணமாகவே கம்பீர் நீக்கப்பட்டார்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல்

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக தில்லியைச் சேர்ந்த துவக்க வீரர் கௌதம் கம்பீர் திகழ்ந்தார். இந்திய அணி 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். குறிப்பாக இறுதிப் போட்டிகளில் இவரது பங்களிப்பு அதிகம்.

இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், சில தொடர்களுக்கு கேப்டனாகவும் செயல்பட்டவர் இந்திய அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

அதுபோல ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணி இரு கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பின்னர் 11-ஆவது சீசனில் அந்த அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து தில்லி அணிக்கு தேர்வான கம்பீர், தற்போது அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி, தனக்கு அளிக்கப்பட்ட முழு ஊதியத்தையும் திருப்பி அளித்துவிட்டார். மேலும் டேர்டெவில்ஸ் ஆடும் லெவனிலும் கம்பீர் இடம்பெறவில்லை. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

கௌதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதே அவரது நடத்தை காரணமாகத்தான். 'ஆங்ரி யெங் மேன்' நடத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனாலேயே அவரை இந்திய அணியின் அமிதாப் பச்சன் என்று நான் அழைத்தேன்.

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது பௌன்சர் பந்துவீச்சில் கம்பீருக்க காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த காயம் எளிதில் குணமடைந்துவிடும், தொடர்ந்து விளையாடலாம் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த காயத்தை காரணம் காட்டி கம்பீர் நாடு திரும்பினார்.

சுமார் 8 ஆண்டுகளாக என்னுடன் நல்ல நட்புடன் பழகிய கம்பீர், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அந்த நட்பை முடித்துக்கொண்டதாக தெரிவித்தார்.

முன்னதாக, கம்பீர் நீக்கத்துக்குப் பின்னர் இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவன், முரளி விஜய், ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com