முதல் டெஸ்ட்: 180 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; இந்தியாவுக்கு 194 ரன்கள் இலக்கு

இந்தியாவுடனான முதல் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

இந்தியாவுடனான முதல் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதன்மூலம் 13 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 2-ஆவது நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் அலெஸ்டர் குக் ரன் ஏதும் ஆட்டமிழந்தார். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், 3-ஆவது நாள் ஆட்டத்தை ஜென்னிங்ஸ் மற்றும் ரூட் தொடர்ந்தனர். 

அஸ்வின் சுழல்:

இடதுகை பேட்ஸ்மேனான ஜென்னிங்ஸூக்கு நெருக்கடி கொடுக்க அஸ்வின் முதல் ஸ்பெல்லில் தொடர்ந்து பந்தை சுழற்றி வந்தார். அதற்கு பலனளிக்கும் வகையில் முதலில் ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் ராகுலிடம் கேட்ச் ஆனார். 

அவரைத்தொடர்ந்து கேப்டன் ரூட்டும் 14 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

இதையடுத்து, மலானுடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அந்த அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இஷாந்த் சர்மா மிரட்டல் ஸ்பெல்:

இந்நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச வந்தார். அவர் இங்கிலாந்து அணியின் நடுகள பேட்டிங் வரிசையை முற்றிலுமாக தகர்த்தார். முதலில் 20 ரன்கள் எடுத்து விளையாடி வந்த மலானை பெவிலியனுக்கு அனுப்பினார். இதையடுத்து, 31-ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் மற்றும் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்து அணிக்கு இரட்டை அடி கொடுத்தார். 

உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. 

உணவு இடைவேளை முடிந்த பிறகு 31-ஆவது ஓவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா அந்த ஓவரின் கடைசி பந்தில் பட்லரை 1 ரன்னில் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஆனால், அதன்பிறகு சாம் குரானும் ரஷீதும் துரிதமாக ரன் குவித்து இங்கிலாந்து அணியின் முன்னிலையை உயர்த்தினர். 

அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது, ரஷித் உமேஷ் யாதவ் பந்தை எதிர்கொள் திணறி வந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் 16 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் அவரை போல்டாக்கினார். 

குரான் பதிலடி:

இதையடுத்து, குரானுடன் பிராட் ஜோடி சேர்ந்தார். பிராட் விக்கெட்டை பாதுகாக்க குரான் அதிரடியாக ரன் குவித்து முன்னிலையை உயர்த்தினார். பவுண்டரியும், சிக்ஸருமாக அடித்து வந்த அவர் 54-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார். இவரது அதரடியினால் இங்கிலாந்து அணியின் முன்னிலை 200-ஐ நெருங்கியது.  

இதற்கிடையில், பிராட் 11 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். இது இஷாந்த் சர்மாவின் 5-ஆவது விக்கெட்டாகும். 

பிராட் ஆட்டமிழந்ததால் குரானுக்கு நெருக்கடி அதிகரித்தது. உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து ஸ்டிரைக்குக்கு வர முயன்ற அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக குரான் 63 ரன்கள் எடுத்தார். 

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com