உலகம் என்ன சொல்கிறது என்பது குறித்து கவலையில்லை: இங்கிலாந்தில் சாதித்த விராட் கோலி பேட்டி!

என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை...
உலகம் என்ன சொல்கிறது என்பது குறித்து கவலையில்லை: இங்கிலாந்தில் சாதித்த விராட் கோலி பேட்டி!

கடந்தமுறை இங்கிலாந்து மண்ணில், 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, இந்தமுறை ஒரே இன்னிங்ஸில் அதைத் தாண்டி தன் திறமையை இங்கிலாந்து மண்ணிலும் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் சதம் குறித்து விராட் கோலி பிசிசிஐ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை. மக்கள் நான் பொய் சொல்வதாக எண்ணுகிறார்கள். ஆனால் என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அணியின் வெற்றிக்காக எந்தளவுக்குப் பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதில்தான் என் அக்கறை இருக்கும்.

சதம் அடிப்பது மட்டும் குறிக்கோள் அல்ல, அதை எப்படிப் பயன்படுத்தப்போகிறேன் என்பதில்தான் அதிகக் கவனம் இருக்கும். நான் ஆட்டமிழந்தபோது மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஏனெனில் எப்படியும் 10-15 ரன்கள் முன்னிலை பெறமுடியும் என எண்ணினேன். ஆனால் அப்படி நடந்திருந்தால் பந்துவீச வாய்ப்பு கிடைத்திருக்காது. எனவே இறைவன் எனக்கு வழங்கியதை ஏற்றுக் கொள்கிறேன். டெஸ்ட் தொடருக்காகத் தயாரானதில் திருப்தியாக உள்ளேன். என்னைப் பற்றி உலகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை. 

இந்தச் சதம் உடலளவிலும் மனத்தளவிலும் கடும் சவாலை அளித்தது. அணிக்கு இதுபோல உதவும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இஷாந்த் சர்மாவும் உமேஷ் யாதவும் அற்புதமாக, பொறுப்புடன் விளையாடி அவர்களுடைய ஸ்கோரை நெருங்க மிகவும் உதவினார்கள். எனக்கு மிகவும் ஆதரவளித்தார்கள். அவர்களுடைய முயற்சி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். அடிலெய்ட் சதம் தான் என்னுடைய சிறந்த சதம். அதற்கடுத்த இடத்தில் இந்தச் சதத்தை வைக்கலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com