கிரிக்கெட் உலகம் பாராட்டும் கோலியின் சதம்: முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் வியப்பு!

கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து...
கிரிக்கெட் உலகம் பாராட்டும் கோலியின் சதம்: முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் வியப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

டி 20 தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் புதன்கிழமை தொடங்கியது. இங்கிலாந்தின் 1000-ஆவது டெஸ்ட்டான இதில் முதலில் ஆடிய அந்த அணி 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 156 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 88 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70 ரன்களையும், கியட்டன் ஜென்னிங்ஸ் 98 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 42 ரன்களையும் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 62 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டையும், முகமது சமி 64 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சரிவாக அமைந்தது. முரளி விஜய், ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 45 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் முரளி விஜய்யும், 46 பந்துகளில் 26 ரன்களுடன் ஷிகர் தவனும், வெறும் 4 ரன்களில் லோகேஷ் ராகுலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினர். பின்னர் கேப்டன் கோலி களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டார். கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 3.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி, 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com