கோலியின் போராட்டம் வீண்: 1000-ஆவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புகைப்படம்: டிவிட்டர்/ இங்கிலாந்து கிரிக்கெட்
புகைப்படம்: டிவிட்டர்/ இங்கிலாந்து கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கும், இந்திய அணி 274 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 149 ரன்களுடன் தனது 22-ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 

இங்கிலாந்து அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில், 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 193 ரன்கள் நியமிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். 

ஆனால், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியனுக்கு திரும்பினர். கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்து வந்தார். 3-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்திருந்தது. கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதல் ஓவரிலேயே அட்டாக்:

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை 4-ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கோலியுடன் பாண்டியா இணைந்தார். இந்த போட்டி இரு அணிகளுக்கும் சாதகமாக இல்லாமல் சமநிலையில் இருந்ததால், கோலியும் பாண்டியாவும் வெற்றி இலக்கை நோக்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி டெஸ்ட் அரங்கில் தனது 17-ஆவது அரைசதத்தை அடித்தார். இதைத்தொடர்ந்து பாண்டியா 2 பவுண்டரிகள் அடிக்க இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. 

இந்தியாவுக்கு இரட்டை அடி:

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வந்தார். அதற்கு பலனளிக்கும் வகையில் முதலில் விராட் கோலியை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். கோலி 51 ரன்கள் எடுத்தார். அதோடு இல்லாமல் அதே ஓவரில் ஷமியை ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். இதனால் நெருக்கடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது. குறிப்பாக களத்தில் இருந்த பாண்டியா மீது மொத்த நெருக்கடியும் குவிந்தது. 

ஷமி ஆட்டமிழந்ததை அடுத்து இஷாந்த் சர்மா களமிறங்கினார். சற்று நேரம் தாக்குபிடித்து 11 ரன்கள் எடுத்த இஷாந்த் முதல் இன்னிங்ஸை போல் ரஷித் சுழலிலேயே மீண்டும் வீழ்ந்தார். இதன்மூலம் போட்டியில் இங்கிலாந்து அணி மொத்த ஆதிக்கத்தையும் செலுத்தி பாண்டியாவுக்கு கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியது. 

கடைசி விக்கெட்டுக்கு இந்திய அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. பாண்டியா உமேஷ் யாதவுக்கு ஸ்டிரைக்கை கொடுக்காமல் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றிக்கு தேவையான ரன்களை மெதுவாக குறைத்து வந்தார். 

பாண்டியா முயற்சி வீண்:

ஆனால், சற்று நேரம் மட்டுமே தாக்குபிடித்த இந்த முயற்சி இந்திய அணிக்கு பலனளிக்கவில்லை. பாண்டியா 31 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்தில் குக்கிடம் கேட்ச் ஆனார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தனது 1000-ஆவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவை வழ்த்தியது. இங்கிலாந்து அணி சார்பில் 2-ஆவது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், குரான் மற்றும் ரஷீத் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com