ஆசியப் போட்டி 2018: இரட்டைத் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணிகள்?

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் இரட்டைத் தங்கம் வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசியப் போட்டி 2018: இரட்டைத் தங்கம் வெல்லுமா இந்திய ஹாக்கி அணிகள்?

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் இரட்டைத் தங்கம் வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அணி உள்ளது. ஹாக்கி லெஜன்ட் என அழைக்கப்படும் தயான்சந்த் காலம் முதல் ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 8 முறை தங்கம் வென்ற பெருமைக்குரியது இந்திய அணி. ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்தின் அபார கோலடிக்கும் திறனை பார்த்து வியந்த அந்நாட்டு அதிபர் ஹிட்லர் ஹாக்கி மட்டையில் பந்து ஒட்டிக் கொண்டதா என சோதனை செய்தார்.
எனினும் காலப் போக்கில் ஐரோப்பிய நாடுகளில் ஹாக்கி அணிகளின் அபார வளர்ச்சி, இயற்கையான புல்தரை மைதானத்தில் இருந்து அஸ்ட்ரோ டர்ப் எனப்படும் செயற்கை புல்தரை மைதானத்துக்கு மாற்றம், பல்வேறு புதிய விதிமுறைகளால் இந்திய ஹாக்கி பின்னடைவை சந்தித்தது. பின்னர் 1975-இல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது.
பல்வேறு வெளிநாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு ஹாக்கியை மேம்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசியப் போட்டிகளிலும் இந்திய அணிகள் வெற்றி, தோல்வி என ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளன. ஆனால் தற்போது உலக ஹாக்கி வட்டாரத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி வருகின்றன. பெரிய அணிகளை வீழ்த்தி தங்கள் இருப்பை உணர்த்தி வருகின்றன.
ஆடவர் அணி
ஆடவர் ஹாக்கி அணி தற்போது தேசிய பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது. கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நெதர்லாந்தின் பிரெடா நகரில் எப்ஐஎச் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெற்றது. உலகின் தலைசிறந்த 16 அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் மதிப்புமிக்க இடத்தை இந்தியா பெறுமா என கேள்வி எழுந்தது.
ஆனால் அவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனா, உலகின் தலைசிறந்த அணிகளான நெதர்லாந்து, பெல்ஜியம் போன்றவற்றை வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தான் இந்தியாவை வீழ்த்த முடிந்தது.
அதே நேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. 15 போட்டிகளில் இதுவரை 3 முறை தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 1966, 1998, 2014 என தங்கம் வென்றது. அதே நேரத்தில் 1982 தில்லி ஆசியப் போட்டியில் சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது மறக்க முடியாததாக உள்ளது. 2006 டோஹா போட்டியில் 5-ஆம் இடத்தையே பெற்றனர்.
கடந்த 1998 பாங்காக் போட்டியில் தங்கம் வென்ற பின் 16 ஆண்டுகள் கழித்து 2014 இன்சியான் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா மீண்டும் தங்கம் வென்றது. 
இந்திய ஆடவர் அணி சர்தார் சிங், ஸ்ரீஜேஷ், மன்பிரீத் சிங், ரூபிந்தர்பால் சிங், பிரேந்திரா லக்ரா, சிம்ரஞ்சித் சிங், மந்தீப் சிங் என அனுபவமும், இளமையும் கலந்த அணியாக உள்ளது.
மகளிர் அணி


அதே நேரத்தில் மகளிர் அணி 1982-இல் தங்கப் பதக்கம் வென்றனர். அதன் பின் தங்கம் வெல்ல 36 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 9 ஆசிய போட்டிகளில் இந்திய மகளிர் அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது மகளிர் அணியும் ஆசிய கண்டத்தில் வலுவான அணியாக உருவெடுத்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. தற்போது லண்டனில் நடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அயர்லாந்திடம் தோல்வியுற்றது. சீனா, தென்கொரியாவை சமாளித்தால் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்லக்கூடும். கேப்டன் ராணி ராம்பால் தலைûயில் மகளிர் அணியில் சுனிதா லக்ரா, நவ்ஜோத் கெளர், மோனிகா, சவிதா, உதிதா உள்பட நம்பிக்கை தரும் நட்சத்திர வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

வரலாறு படைக்குமா ?
ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் ஆடவர், மகளிர் அணிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளன. ஆசியப் போட்டி வரலாற்றில் ஆடவர், மகளிர் அணிகள் ஓரே நேரத்தில் தங்கம் வென்ற பெருமையை தென்கொரியா மட்டுமே இதுவரை பெற்றுள்ளது. எனவே இந்தியாவின் இரு அணிகளும் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com