வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய விஜய், ராகுல்: மழையால் ஆட்டம் மீண்டும் பாதிப்பு!

இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.. 
வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய விஜய், ராகுல்: மழையால் ஆட்டம் மீண்டும் பாதிப்பு!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  

மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க வேண்டிய இந்திய அணி, மோசமான ஆட்டத்தால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

நேற்றைய முழு நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஷிகர் தவன், உமேஷ் யாதவுக்குப் பதிலாக புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக வோக்ஸ் தேர்வாகியுள்ளார். இளம் வீரரான போப் இந்த டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார். 

இந்நிலையில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக உள்ள சூழலில் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்ட் ஆனார் விஜய். அடுத்ததாக, ராகுலும் ஆண்டர்சன் பந்துவீச்சில் 8 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்தது.

இதன்பிறகு, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வீரர்கள் பெவிலியனுக்குத் திரும்பினார்கள்.  அப்போது இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா, கோலி ஆகிய இருவரும் தலா 1 ரன் எடுத்து களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com