லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

இங்கிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

இங்கிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-ஆவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. ஆனால், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாத நிலையிலேயே ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து, வெள்ளிக்கிழமை டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சதம் அடித்த வோக்ஸ் மற்றும் கரான் 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்து அணியின் முன்னிலை முதல் இன்னிங்ஸில் 250-க்கு மேல் இருந்ததால் இருவரும் துரிதமாக ரன்களை குவித்தனர்.

கரான் 40 ரன்கள் எடுத்திருந்தபோது பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 396 ரன்கள் குவித்து 289 ரன்கள் முனனிலை பெற்றிருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வோக்ஸ் 137 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 2-ஆவது இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆகி சோபிக்கத் தவறினார். அவரைத்தொடர்ந்து ராகுலும் 10 ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகு ரஹானே மற்றும் புஜாரா நிதானமான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இருப்பினும் அந்த பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு நீண்ட நேரம் பலனளிக்கவில்லை. முதலில் ரஹானே 13 ரன்களுக்கும், அடுத்ததாக புஜாரா 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு இந்திய அணியின் பேட்டிங் முதல் இன்னிங்ஸை போல் சீட்டுக்கட்டாக சரிந்தது. கோலி 17 ரன்கள், கார்த்திக் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் பிராட்டின் ஹாட்ரிக் வாய்ப்பை முறியடித்தார். அதன்பிறகு பாண்டியா மற்றும் அஸ்வின் ஓரளவு பாட்னர்ஷிப் அமைத்தனர். பாண்டியா - அஸ்வின் ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பாண்டியா 26 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி அஸ்வினுக்கு ஒத்துழைப்பு தராமல் ஏமாற்றம் அளித்தனர். இதனால், இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஸ்வின் 33 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் மற்றும் பிராட் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம், இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இருஅணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com