விராட் கோலியை விடவும் அதிக யோ யோ புள்ளிகளை எடுத்த தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்!

டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளார் அருண் கார்த்திக்..
விராட் கோலியை விடவும் அதிக யோ யோ புள்ளிகளை எடுத்த தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்!

டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளார் அருண் கார்த்திக்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து திண்டுக்கல் அணி 117 ரன்களையே எடுத்தது. மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4-30, லோகேஷ் ராஜ் 3-31, வருண் சக்கரவர்த்தி 2-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 118 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து மதுரை அணி 119 ரன்களுடன் வெற்றி பெற்றது. அருண் கார்த்திக் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2008 முதல் தமிழக ரஞ்சி அணிக்காக விளையாடிய அருண் கார்த்திக், ஆறு வருடங்கள் கழித்து அஸ்ஸாம் அணிக்கு மாறினார். அடுத்த மூன்று வருடங்கள் கழித்து அவர் கேரளாவுக்குத் தாவினார். மேலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக 2008 முதல் 2010 வரை விளையாடினார். 2011-ல் பெங்களூர் ஐபிஎல் அணியில் இடம்பெற்றார். அதே வருடம் சாம்பியன் லீக் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூர் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற உதவினார். 

இந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், அதிக அரை சதங்கள், அதிக ரன்கள் சராசரி என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் அருண் கார்த்திக். 

உடற்தகுதியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள 32 வயது அருண் கார்த்திக், ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற யோ யோ உடற்தகுதித் தேர்வில் 19.2 புள்ளிகள் எடுத்துள்ளார்.

இந்திய அணியில் அதிகபட்ச யோ யோ புள்ளிகளைக் கொண்டுள்ளவர்களாக விராட் கோலியும் (19) மணீஷ் பாண்டேவும் (19.2) உள்ளார்கள். ஆனால் 19.2 புள்ளிகள் எடுத்து கோலியின் அளவுகோலைத் தாண்டியுள்ளார் அருண் கார்த்திக். 

எனினும் இந்திய கிரிக்கெட் வீரர்களில், 2006-ல், யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய மயங்க் டகார், யோ யோ தேர்வில் 19.3 புள்ளிகள் எடுத்து சாதனை செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக யோ யோ புள்ளிகளை எடுத்தவர் இவரே. முன்னாள் வீரர் சேவாக்கின் உறவினரும்கூட. இந்திய அணியில் தேர்வாக 16.1 யோ யோ புள்ளிகள் தேவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com