பிசிசிஐ தலைவராக செளரவ் கங்குலிக்கு வாய்ப்பு?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தலைவராக செளரவ் கங்குலிக்கு வாய்ப்பு?



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே பணபலமும், செல்வாக்கும் மிக்க விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் பிசிசிஐ செல்வாக்கு அமைந்துள்ளது. இதில் அரசியல்பலம் பொருந்தியவர்கள், தொழிலதிபர்கள் நிர்வாகிகளாக இருந்து வருகின்றனர். மத்திய அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் தன்னாட்சி பொருந்திய அமைப்பாக இது இயங்கி வருகிறது.
இந்நிலையில் டி 20 லீக் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்ததை அடுத்து உச்சநீதிமன்றம் தலையிட்டு பிசிசிஐ செயல்பாடுகளை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா குழுவை அமைத்தது. அக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அண்மையில் பிசிசிஐ தொடர்பான வரைவு சட்டதிட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
அதில் ஒரு மாநிலம் ஒரு வாக்கு, நிர்வாகிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்த பின் போட்டியிட முடியாது, 70 வயதுக்கு மேல் பதவியில் இருத்தல் கூடாது, அரசியல்வாதிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் நிர்வாகிகள் பொறுப்பை வகிக்கக்கூடாது உள்ளிட்டவை அடங்கும்.
தற்போது பதவியில் உள்ள மற்றும் முன்னாள் நிர்வாகிகள் வரைவு சட்டதிட்டத்தின்படி மீண்டும் பொறுப்பை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லோதா குழு முதலில் அளித்த பரிந்துரையில் 3 ஆண்டுகள் பதவி வகிக்கும் நிர்வாகிகள் உடனே மீண்டும் பதவியில் தேர்வாக முடியாது என கூறியிருந்தது. அதை உச்சநீதிமன்றம் மாற்றி தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்த பின் தேர்தலில் போட்டியிட முடியாது என மாற்றியது.
பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் தொடர்ந்து 9 ஆண்டுகள் பொறுப்பில் உள்ளோர் இதனால் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளனர்.
தற்போது பிசிசிஐ தலைவர் சி.கே.கன்னா, செயலாளர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோர் இதனால் அடுத்த வாரிய தேர்தலில் நிற்க முடியாது. மேலும் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா, முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகுர் போன்றோரும் தங்கள் மாநில சங்கங்களில் தொடர்ந்து 9 ஆண்டுகள் பதவி வகித்ததால் தேர்தலில் போட்டியிடும் தகுதி இழந்து விட்டனர். 
செளரவ் கங்குலிக்கு வாய்ப்பு? இதனால் புதியவர்கள் தான் பொறுப்புகளுக்கு வரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களால் பெயர்குலைந்துள்ள பிசிசிஐ அமைப்புக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தலைவராக ஆனால் இழந்த பெருமையை மீண்டும் மீட்க முடியும். வாரிய செயல்பாடுகளும் சீராகும் என்ற கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 4 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார் கங்குலி. இதனால் வரைவு சட்டதிட்டத்தின் அம்சமும் உடனே கங்குலியை பாதிக்காது.
ஏற்கெனவே பிராந்தியவாரியாக பிசிசிஐ தலைவர் பதவி ஒதுக்கப்படும் முறையை உச்சநீதிமன்றத்தின் புதிய சட்டதிட்ட வரைவு நீக்கப்பட்டு விட்டது. எந்த மாநில சங்கமும் வேட்பாளரை நிறுத்தலாம்.
எனினும் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் கழித்து அவர் விலகவேண்டியிருக்கும். தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி என்ற விதியின் கீழ் அவர் பதவி விலக நேரிடும். தற்போதைய நிலையில் கங்குலியே தலைவர் பொறுப்புக்கு ஏற்றவர் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.
இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தாலும், கங்குலியால் தற்போதைய மிகவும் அவசியமான வாரிய செயல்பாடுகளில் ஸ்திரத்தன்மை, நேர்மை, போன்றவற்றை மேற்கொள்ள முடியும். வீரர்களால் சிறந்த நிர்வாகிகளாக செயல்பட முடியும். ஆனால் அது எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்பதை பொறுத்து அமையும் என கங்குலி முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008-இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி 2012 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். பின்னர் பிசிசிஐ தொழில்நுட்பக் குழு, ஆலோசனைக் குழு, ஐபிஎல் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றார். வங்காள கிரிக்கெட் சங்கத்தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com